மதுராந்தகம் இடைத்தேர்தலில் இலைக்கட்சிக்கு ஆதரவாக பழக் கட்சி இருக்குமென எதிர்பார்த்த நிலையில், தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது அக்கட்சித் தலைமை. ஆளும்தரப்புடன் மறைமுக டீல் போட்டுக் கொண்டுதான் பழக் கட்சித் தலைமை அப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆனால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் இலைக்கட்சியுடன் நெருக்கமாக இருக்கவே விரும்புகிறார்களாம். ஒருசிலரோ, இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கல்லாகட்டிவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்கள்.
சமீபத்தில், ஆளும்கட்சி புள்ளிகளை சந்தித்து, ‘எங்க வாக்கு உங்களுக்குத்தான்.. அதுக்கு நாங்க பொறுப்பு. எங்களுக்கு லட்டுகளை கொடுத்துவிடுங்கள்’ என ஒரு தரப்பினர் வசூலித்திருக்கிறார்கள். பழக் கட்சியின் இன்னொரு டீம் அறிவாலய புள்ளிகளை சந்தித்து, ‘எங்க ஆட்களை சூரியனுக்கு போடச் சொல்லிட்டோம்’ என அங்கேயும் வசூலை போட்டிருக்கிறார்கள். இலைக்கட்சியிடமிருந்தும் அன்பளிப்புகளை வாங்க முயற்சி நடக்கிறதாம்.