சிங்கப்பூர் துறைமுகத்தில் விபத்து; பலியான ராணிப்பேட்டை இளைஞரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஸ்திரி மணி. இவரது மகன் வினோத் (வயது 33). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குடும்பச் சூழல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள `துவாஸ்’ சரக்கு முனைய துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் வினோத். அங்கு வரும் கப்பல்களில் சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல், அடுக்கி வைத்தல் மற்றும் பாதுகாப்பாக நிலை நிறுத்துதல் ஆகிய வேலைகளில் சகப் பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி காலை 8.40 மணியளவில், வினோத்தும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய துரை என்ற மற்றொருத் தொழிலாளியும் துறைமுகத்தின் உயரமான இடத்தில் பணியில் ஈடுபடுவதற்காக பாதுகாப்பு கூண்டு போன்ற மேன் கேஜ் பெட்டியில் ஏறி நின்றனர். கிரேன் வாகனம் மூலம் அந்த மேன் கேஜ் பெட்டி உயரமான இடத்துக்குத் தூக்கப்பட்டது.

வினோத்தின் உடல்

அப்போது, கிரேனின் பிடியில் இருந்து மேன் கேஜ் பெட்டி கழன்று கடலில் விழுந்தது. அதற்குள் இருந்த வினோத் சுயநினைவின்றி முதலில் மீட்கப்பட்டார். மற்றொரு தொழிலாளியான துரை உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வினோத்தை காப்பாற்றுவதற்காக அருகிலுள்ள பொது மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனாலும், துரதிஷ்டவசமாக வினோத்தும் உயிரிழந்தார்.

மேன் கேஜ் என்பது துறைமுகங்களில் மிக உயரமான கப்பல்களின் பக்கவாட்டுப் பகுதிகள் அல்லது கிரேன்களின் உச்சிப் பகுதிகளில் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும்போது, அவர்கள் பாதுகாப்பாக ஏறி நிற்கப் பயன்படக்கூடியது. இதில், பணியாளர்களுக்கான பாதுகாப்பு பெல்ட்டுகள், வழுக்காத தரைத்தளம், சுற்றிலும் வலுவான பாதுகாப்பு கம்பிகள் இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், துறைமுகங்களில் உயரமான இடங்களில் வேலைச் செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு தூக்கும் கூண்டு.

கடலில் விழுந்த மேன் கேஜ்

இந்த மேன் கேஜ் முறையாகப் பராமரிக்கப்படாததே கோர விபத்துக்கான காரணம் என அங்கிருக்கும் ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உயிரிழந்த இரு தொழிலாளிகளின் உடல்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட துறைமுக நிறுவனம் மேற்கொண்டது. அதன்படி, வினோத்தின் உடல் விமானம் மூலம் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு சொந்த ஊரான நரசிங்கபுரத்தில் இன்றைய தினம் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வினோத்தின் உடலைப் பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதையடுத்து, அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம், நரசிங்கபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *