விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) நிறுவனத்தின் பிரமாண்ட பங்குச் சந்தை அறிமுகத்தைத் (IPO) தொடர்ந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் ‘டிரில்லியன் அதிபர்’ (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இருப்பினும், இவ்வளவு பிரமாண்ட சொத்துக்கு அதிபதியான பிறகும், அவர் டெக்சாஸில் உள்ள ஒரு எளிய 400 சதுர அடி சிறிய வீட்டிலேயே வசித்து வருகிறார்.
‘பார்ச்சூன்’ (Fortune) மற்றும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ ஆகிய சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, கடந்த ஜூன் 12, 2026 அன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொதுச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.
வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே அதன் பங்குகள் அசுர வேகத்தில் உயர்ந்ததால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 1.77 டிரில்லியன் டாலராக எகிறியது.
இதன் மூலம், அந்நிறுவனத்தில் பெரும் பங்குகளைக் கொண்டுள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்து, அவர் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
ஆனாலும், மஸ்க்கின் வாழ்க்கை முறை வியக்கத்தக்க வகையில் மிகவும் எளிமையாகவே உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா (Boca Chica) பகுதியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார்பேஸ்’ ஏவுதளத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
‘பாக்ஸபிள்’ (Boxabl) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த இந்தச் சிறிய வீட்டை, அவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். இதில் ஒரு சிறிய வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் ஒரு குளியலறை மட்டுமே உள்ளன.