கடத்தல்காரர்கள் சுமார் 40 கி.மீ. தூரம் சென்ற நிலையில், அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், ஒருவரை போலீஸார் பிடித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் என்பதும், பெங்களூருவில் இருந்து சுமார் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமை காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்று கடத்தல்காரர்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.