திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் காலை 6 மணி முதல், அடுத்த நாள் இரவு 2.30 மணி வரை திரையிட்டுக் கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
கடந்த வாரம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அதில் இந்த விடியற்காலை 6 மணி காட்சிக்காகத் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து கோரிக்கையை முன்வைத்திருந்தன. அதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அரசாணையில், “தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் முன்வைத்தன.
அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்குத் திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படிக் கோரியிருந்தன.