பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!| District Administration Removes Tasmac Shop in Periya Kurumbathteru After Continuous Protest

Spread the love

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை… கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை… ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு கிடைத்திருக்கிறது. அப்பகுதியில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் முழுமையாக அகற்றியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகுரும்பத் தெருவில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகப் போராடி வந்தனர். பள்ளிக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான மாணவிகளின் பாதுகாப்பு, அந்தப் பகுதியில் நடந்த விபத்துகளில் இரண்டு உயிர்கள் பறிபோனது, அருகிலுள்ள விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்படுவது எனப் பல்வேறு காரணங்களை முன்வைத்து மாவட்ட நிர்வாகத்திடம் சுமார் 10 முறை மனு அளித்திருந்தனர்.

பெரிய குரும்பத்தெரு

பெரிய குரும்பத்தெரு

அதிகாரிகள் தரப்பில் கடையை அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லாததால், அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து, இனிமேல் பெரியகுரும்பத் தெருவில் கிராம சபையே நடக்காது எனத் தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.

இந்த மக்களின் கோரிக்கையையும் தொடர் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி, அக்டோபர் 5-ம் தேதி விகடன் தரப்பில் ஸ்பாட் விசிட் செய்து மக்களின் பிரச்னையைக் கேட்டறிந்து, “டாஸ்மாக்கை அகற்றல… இனி கிராம சபையே நடக்காது!” – கிராம சபையை புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு கிடைக்குமா? என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பெரியகுரும்பத் தெருவில் இருந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *