கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகே உள்ள கருவாற்றா புத்தன்புரை பகுதியைச் சேர்ந்தவர் கே.ராஜேஷ் (50). உயிரோடு இருக்கும்போதே ‘மறைந்தவர்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, சொந்த வீட்டிலேயே இறுதி மரியாதை செய்யப்பட்ட விசித்திரமான, அதே சமயம் வேதனையான துயர வரலாறு இவருடையது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் சிக்கிய ராஜேஷ், கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கலால் துறையினரால் கைது செய்யப்பட்டு, திருவனந்தபுரம் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார்.
அவரை ஜாமீனில் எடுக்க ஆட்கள் இல்லாததால் சுமார் 11 மாதங்கள் தொடர்ந்து சிறையிலேயே இருக்க நேரிட்டது.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதம், திருவனந்தபுரம் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த ராஜேஷ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகச் சிறை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அனுப்பியது. செய்தி கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், சிறைக்குச் சென்று உடலைப் பெற்றுக்கொண்டு வந்து, சொந்த வீட்டின் கொல்லைப்புறத்திலேயே அடக்கம் செய்து இறுதிச்சடங்குகளையும் முடித்தனர்.
ஆனால், உண்மையில் அன்று மாரடைப்பால் உயிரிழந்தவர் அனில்குமார் என்ற மற்றொரு கைதி.
அனில்குமாரின் சிறைக் கைதி எண் 7372,
ராஜேஷின் எண் 7273.

எண்களில் உள்ள இந்த சிறிய முன்பின் மாற்றத்தை ஆவணங்களில் தவறாகக் குறித்த சிறைத்துறை அதிகாரிகள், அனில்குமார் இறந்ததற்குப் பதிலாக ராஜேஷ் இறந்துவிட்டதாகப் பிழையாகப் பதிவு செய்துவிட்டனர். உடலைப் பெறச் சென்றபோதே ராஜேஷின் குடும்பத்தினருக்கு லேசான சந்தேகம் எழத்தான் செய்தது. ஆனால், சிறையில் இருந்ததால் அவரது உடல் நிறம் மாறி சற்றுப் பருமனாகியுள்ளார் எனவும், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதால்தான் முகம் சற்று மாறித் தெரிகிறது என்றும் சிறைக்காவலர்கள் கூறி அவர்களின் சந்தேகத்தை மழுங்கடித்தனர்.
ராஜேஷின் தந்தை கருணாகரனுக்குப் பார்வைத் திறன் முற்றிலும் மங்கியிருந்தது. தாய் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார். உடன் பிறந்த சகோதரர் ராஜீவ் அப்போது மும்பையில் இருந்தார். இதனால் விரிவாகச் சந்தேகிக்க ஆளின்றி, அந்த உடலை ராஜேஷின் உடல் என நம்பி உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்துவிட்டனர்.
இறுதிச்சடங்கு முடிந்து, அஸ்தி கரைக்கும் ‘சஞ்சயனம்’ நிகழ்வும் நிறைவடைந்த நிலையில், சரியாக 11-வது நாள் ராஜேஷின் ஊர்க்காரர் ஒருவர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக் கைதியாக அதே சிறைக்குச் சென்றார். அவர் ராஜேஷை நேரில் பார்த்துப் பதறிப்போய், “நீ இறந்துவிட்டதாகக் கூறி ஊரில் அடக்கமே செய்துவிட்டார்களே!” என்று கூற, அதைக் கேட்டு ராஜேஷே உறைந்துபோனார்.
உடனடியாக இந்த விபரம் சிறைக் கண்காணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தீவிரப் பதிவேடு ஆய்வுக்குப் பின்னரே, கைதி எண்களை மாற்றி எழுதியதால் பிணம் மாறிய அதிர்ச்சி உண்மை சிறைத்துறைக்குத் தெரியவந்தது. ஊரில் 16-ம் நாள் காரியத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், “ராஜேஷ் சாகவில்லை; உயிரோடு இருக்கிறார்!” என்ற தகவல் உறவினர்களுக்குச் சொல்லப்பட்டது.
அதன்பிறகு சட்ட நடைமுறைகள் முடிந்து, ஜாமீன் பெற்று அவர் ஊர் திரும்பினார் ராஜேஷ்.16 வயதிலேயே ராஜேஷைத் தசைச் சிதைவு நோய் தாக்கியிருந்தது. சிறையிலிருந்து விடுதலையாகி வந்த காலகட்டத்தில், நோயின் தாக்கம் சற்றுத் தணிந்திருந்தது. அப்போது நல்லுள்ளங்கள் சிலர் வாங்கிக் கொடுத்த மூன்று சக்கர வாகனத்தின் மூலம் மீன் வியாபாரம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ரமா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்னா என்ற மகள் உள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல தசைச் சிதைவு நோய் தீவிரமடைந்து, ஒருகட்டத்தில் அவரால் சுயமாக எழுந்து நிற்கக் கூட முடியாத சூழல் உருவானது. குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றி, தன் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற்று மின்சார சக்கர நாற்காலி ஒன்றை வாங்கினார். தற்போது அந்த சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி லாட்டரிச் சீட்டுகளை விற்றுத் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
தன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட அந்தச் சம்பவம் குறித்துப் பேசும் ராஜேஷ்,”உயிரோடு இருந்த என்னை இறந்துவிட்டதாக அறிவித்து என் குடும்பத்தையே நிலைகுலையச் செய்த சிறைத்துறை நிர்வாகத்தின் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எனக்கு இழப்பீடாக வெறும் 15,000 ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால், அந்த வழக்கை நடத்த நான் வழக்கறிஞருக்கும் நீதிமன்றத்திற்கும் செய்த செலவோ அதைவிடப் பல மடங்கு அதிகம்.
என் வாழ்க்கையையே சீரழித்த அந்தச் சிறைத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டதா என்பதுகூட இன்றுவரை எனக்குத் தெரியாது. என் உடலுக்குப் பதிலாக அடக்கம் செய்யப்பட்ட அனில்குமாரின் குடும்பத்திற்கு அப்போதைய வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான அரசு உரிய நிவாரண உதவிகளைச் செய்ததாகப் பத்திரிகைகள் வாயிலாகப் படித்துத் தெரிந்துகொண்டேன். நோயோடு போராடும் எனது வலியைப் போக்கத்தான் யாருமில்லை.” என்று கண்கலங்கக் கூறுகிறார்.