International
oi-Vignesh Selvaraj
இஸ்லாமாபாத்: தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் சிறையில் இருந்து தான் உயிருடன் திரும்புவது மிகவும் கடினம் என்றும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் நாட்டில் உச்ச அதிகாரம் கொண்ட நீதிபதிகளுக்கு சிறையில் இருந்தபடியே இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார். அதை அவரது வழக்கறிஞர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் இம்ரான் கான் கூறியதாவது: “நான் இந்த கடிதத்தை முன்னாள் பிரதமர் என்ற முறையிலோ, அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலோ எழுதவில்லை. பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளேன், தொண்டு மற்றும் மக்கள் பணி ஆற்றியுள்ளேன். தனி சிறையில் இருந்து இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். இந்த சிறையின் சுவர்களை கடந்து எனது குரலை வெளிப்படுத்த எனக்கு இது ஒன்றுதான் வழி.
வெளி உலகுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 22 மணி நேரம் வரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். எனது வலது கண்ணில் பார்வைத் திறனை 85 சதவீதம் இழந்துள்ளேன். உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் சூழல் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சிறையில் உள்ள எனது மனைவி புஷ்ரா பீபியின் உடல்நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை என் வாழ்நாளில் நான் கட்டியுள்ளேன். இன்று எனக்கும், எனது மனைவிக்கும் முறையான சிகிச்சை வேண்டும் என்று தான் முறையிடுகிறேன். சிறைச்சாலை மருத்துவ குழு பரிந்துரை கூட எனது விவகாரத்தில் நிறைவேற்றப்படவில்லை.
உயிருடன் இருந்தால் மட்டுமே ‘நான் நிரபராதி’ என்பதை என்னால் நிரூபிக்க முடியும். மனித நேயத்தின் விழுமியங்களின் அடிப்படையில், காலம் கடக்கும் முன் எனக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு உங்களிடம் முறையிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் (73), கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தனது பதவியை இழந்தார்.
அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தால், தனக்கு எந்தச் சலுகையும் தேவையில்லை என்றும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மருத்துவ சிகிச்சை தொடர்பான உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, தனக்கும் தன் மனைவிக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.