சிற்பிகாவின் வாழ்க்கையில் புதிய திருப்பம்: ரகுநந்தனுடன் செல்ல சம்மதிப்பாரா? – Kumudam

Spread the love

“என்ன, வெளியூர் வேலைன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன். ஐ ஆம் ஸாரி!” என்று சொல்லிக்கொண்டே சிற்பிகா எழுந்த சமயத்தில், அந்த அறையின் கதவு திறந்தது. அனுபவ் உள்ளே வந்தார்.

“என்ன, தில்லியில் இல்லை வேலை, வெளியூர்னு தெரிஞ்சதும் வேணாம்னு தோணுதா? இரு, உன்னிடம் இதைப் பேசத்தான் நான் வந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு, ரகுநந்தனை நோக்கி அர்த்தமுள்ள பார்வையை வீசினார். அவருடைய பார்வையில் அவனிடம் அவர் ஏதோ சொல்லாமல் சொன்னாரோ என்று சிற்பிகாவிற்குத் தோன்றியது.

“சரி அங்கிள், நான் கெளம்பறேன். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அதை எல்லாம் முடிச்சுட்டா நாளைக் காலையில் கெளம்பிடுவேன்” என்று அவரிடம் பேசிவிட்டு, சிற்பிகாவின் பக்கம் திரும்பினான் ரகுநந்தன். “மிஸ். சிற்பிகா, நீங்க என்னோட ஆஃபரை ரிஜெக்ட் செஞ்சதுல எனக்கு ஏமாற்றம்தான். பரவாயில்லை, திரும்பவும் யோசிச்சுப் பாருங்க. உங்களோட முடிவில் ஏதாவது மாற்றம் இருந்தா, எனக்கு ஃபோன் பண்ணிச் சொல்லுங்க. என்னோட நம்பரை டாக்டர் கிட்டேயிருந்து வாங்கிக்கோங்க” என்று சொல்லிவிட்டு, யாரையோ மொபைலில் அழைத்தான். நடுத்தர வயது மனிதன் ஒருவன் வந்து ரகுநந்தனை வெளியே அழைத்துச் சென்றான்.
“என்னம்மா, எதையும் யோசிச்சுப் பாட்க்காம நோ சொல்லிட்டியே?”

“வேற என்ன செய்ய முடியும் ஸார்? முதலில் வேலை என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியலை. அடுத்து வெளியூர் போகணுமாம். அதுவும் எங்கயோ இருக்கிற ஹிமாச்சலப் பிரதேசம் போகணும். அதுவும் உடனே கெளம்பணுமாம். எப்படி நான் இந்த ஆஃபரை எடுத்துக்குவேன்னு நீங்க நெனைச்சீங்கன்னு எனக்குப் புரியலை” என்று சொன்னபோது சிற்பிகாவின் குரலில் லேசாகக் கோபம்கூட எட்டிப் பார்த்தது.

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்லறதைக் கேளு. அதுக்கப்புறம் முடிவெடு. உன்னை மாதிரியே இந்த ரகுநந்தனும் எல்லா உறவுகளையும் இழந்துட்டு நிக்கிற பாவப்பட்ட ஜன்மம். எந்தத் தப்பும் செய்யாமலேயே தண்டிக்கப்பட்டவன். அவன் மேல நீ இரக்கப்பட்டு இந்த வேலையை ஒத்துக்கச் சொல்லலை நான். உன்னோட வாழ்க்கையிலயும் எல்லாத்தையும் இழந்துட்டு நீ நிக்கற இந்த நிலைமையில, உனக்கு ஒரு சேஞ்சா இருக்கும்னு நினைச்சேன். அவ்வளவுதான்!” “என்னைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது புரொஃபஸர். நான் என் கதையை யார் கிட்டயும் பகிர்ந்துகிட்டதே இல்லையே? நீங்களா ஏதோ அனுமானிச்சுப் பேசறீங்க, இல்லையா? ”

“இருக்கலாம். ஆனால், நான் ஒண்ணும் முட்டாள் இல்லை. உன்னோட வாழ்க்கையில் நடந்த, நடக்கற திடீர்த் திருப்பங்களை என்னால புரிஞ்சுக்க முடியுது. நீ நல்ல புத்திசாலி. எய்ம்ஸ் மெடிக்கல் காலேஜில் சேர்ந்து படிக்கிற வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்குது? எவ்வளவோ கஷ்டமான என்ட்ரன்ஸ் எக்ஸாமை நீ ஈஸியா கிளியர் பண்ணிட்டு வந்து மெடிக்கல் படிக்க ஆரம்பிச்சே. 

சேர்ந்ததில் இருந்து நல்லாப் படிச்சே. அதுவும் உன்னோட பேட்ச்சில டாப்பர் நீ. அப்படி இருக்கும்போது திடீர்னு ஒருநாள் ஊருக்குக் கிளம்பிப் போனே. படிப்பும் அதோட நின்னுபோச்சு. அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு உன்னை நான் பார்க்கறேன். அதுவும் கையில் குழந்தையோட. உன் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்ததுன்னு நான் தெரிஞ் சுக்க வேண்டியதில்லை. ஆனால், நீ என்னிடம் உதவி கேக்கக் கூட வரலையேன்னு வருத்தமா இருந்தது. தற்செயலா நீ என் கண்ணில் பட்டே. அதுவும் நீயா என்னை வந்து மீட் பண்ணலை. அதுக்கப்புறம்தான் பேசவே ஆரம்பிச்சோம். நான் இதுவரை சொன்னதெல்லாம் உண்மைதானே?”

“ஆமாம்” என்று தலையசைத்தவளின் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது. “ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு உன் வாழ்க்கையிலன்னு எனக்குப் புரிஞ்சுது. அது என்னன்னு நீயா எங்கிட்ட மனம் திறந்து சொல்ற வரைக்கும் நானாக் கேக்கக்கூடாதுன்னு நினைச்சேன். உன் பேரைக் கூட நீ சட்ட ரீதியா மாத்திக்கிட்டு இங்கே வாழ வந்திருக்கே. அப்படின்னா யாருக்கோ பயந்து இங்கே ஓடி வந்திருக்கே.

உன்னோட சொந்த ஊரை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டு வந்து இங்கே ஒளிஞ்சு வாழறே. நீ யாருக்கு பயந்து ஓடி வந்திருக்கியோ, அவங்க நீ தில்லியில இருக்கிறதை ஈஸியாக் கண்டுபிடிச்சுருவாங்க. அப்புறம் என்ன செய்வே? அதுக்கு ஹிமாச்சல் பிரதேசம் போறது நல்லதில்லையா? அங்கே போய் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ நிம்மதியா இருக்கலாம். நீ அங்கே போற விஷயம் என்னைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாமல் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.

“உன்னோட குழந்தை பத்தியும் நான் ரகுநந்தன் கிட்டே சொல்லிட்டேன். குழந்தையைப் பாத்துக்க அவன் வீட்டுலயும் நிறைய ஆட்கள், அதாவது, வீட்டு வேலைகளில் உதவிக்கு வரவங்க இருக்காங்களாம். அதெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிடுவேன்னு சொல்றான். அவன் நல்ல வசதியானவன். அன்போட அவனைக் கவனிச்சுக்கற ஆள் வேணும்னு தேடறான். வேலை என்ன பெரிய வேலை… உன்னோட புத்திசாலித்தனத்துக்கு நீ எல்லாத்தையுமே வேகமாக் கத்துக்குவே. இதைவிட நல்ல வாய்ப்பு உனக்குக் கிடைக்கும்னு தோணலை எனக்கு” என்று அவளிடம் அனுபவ் விளக்கியபோது, அவருடைய குரலில் சலிப்புத் தட்ட ஆரம்பித்தது. அன்பும் அக்கறையும் கலந்த அவருடைய வார்த்தைகள் அவளுடைய செவி வழியாக உள்ளத்தில் இறங்கியபோது, என்னவோ செய்தது. நெகிழ்ந்து போய்விட்டாள். ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தாள்.

அந்தச் சமயத்தில் அறையின் கதவு திறந்தது. உள்ளே வந்தது அனுபவ்வின் மனைவி கஸ்தூரி. தில்லியில் பிரபல லாயராக இருந்து, இப்போது பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விலகி வந்துவிட்டார். அவ்வப்போது யாருக்காவது சட்டரீதியான அறிவுரைகள் தேவையென்றால் உதவும் அளவுக்கு அதீத ஞானமுள்ள சட்ட நிபுணர். “டயமாச்சு அனுபவ், லஞ்ச் சாப்பிட வேணாமா? ஏன் இன்னும் வரலை?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவர், அழுதுகொண்டிருந்த சிற்பிகாவைப் பார்த்துப் பதறிப் போனார். கண்ணீரைக் கண்டதும் தாய் போல உருகிப்போய், அவளருகில் ஓடிச் சென்று அமர்ந்தார். சிற்பிகாவைப் பற்றி நன்றாகத் தெரியும் அவருக்கு. அவளை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறார்.

சிற்பிகாவின் அருகில் உட்கார்ந்து அவளுடைய கையை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார். “சிற்பிகா டியர், என்ன ஆச்சு? அனுபவ் ஏதாவது கோபமாப் பேசிட்டாரா? அவர் உன் மேல ரொம்பப் பிரியம் வச்சிருக்காரு. அந்தப் பிரியத்துனால உரிமை எடுத்துக்கிட்டு ஏதாவது சொல்லியிருப்பாரு. நீ எதுவும் தப்பா எடுத்துக்காதேம்மா” என்று ஆறுதலாகப் பேசினார் கஸ்தூரி. “நோ மேடம், ஸார் ஒண்ணும் சொல்லலை. நான் என்னோட விதியை நினைச்சு அழுதேன். என்னோட எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு” என்று தட்டுத் தடுமாறிப் பேசினாள் சிற்பிகா.

“அப்படியெல்லாம் பயப்படக்கூடாது. நாங்கள்ளாம் உன் கூட இருக்கோம். என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக்கலாம். தைரியமா இரு” என்று கூறியவர், தன் கணவரை முறைத்தார். “அனுபவ், அவளுக்குச் சமாதானம் சொல்லாமல் ஏன் இப்படி வேடிக்கை பார்த்துட்டு உக்காந்திருக்கீங்க? சிற்பிகாவோட கண்ணீர் உங்களைப் பாதிக்கலையா?” என்று கடிந்துகொண்டார். “என்ன நடந்ததுன்னு தெரியாமப் பேசாதே, கஸ்தூரி. நான் அவளுக்கு உதவி செய்ய நினைச்சா, முட்டாள்தனமா நடந்துக்கறா. அதை ஏத்துக்க மறுக்கிறா” என்று ஆரம்பித்தார் அனுபவ்.

“என்ன உதவி? ஏன் மறுக்கிறா? தெளிவாச் சொல்லுங்க, ப்ளீஸ்” என்று கேட்டார் கஸ்தூரி. “நான் ரகுநந்தனோட இவளை அனுப்ப ஏற்பாடு செஞ் சிருந்தேன். அந்த கோல்டன் சான்ஸைத் தவறவிடறதுல குறியா இருக்கா இந்தப் பொண்ணு’ என்று குற்றம் சாட்டினார் அனுபவ். “ஏம்மா வேண்டாம்னு ஒதுக்கினே? ரகுநந்தன் ரொம்ப நல்லவன். எனக்கும் அவனைப் பல வருஷங்களா தெரியும். ஹி இஸ் எ ஜெம் ஆஃப் எ பெர்ஸன். அவன் கிட்ட வேலை பார்க்க ஏன் விருப்பமில்லை உனக்கு?” என்று கஸ்தூரி கேட்டவுடன், உடைந்து போனாள் சிற்பிகா. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

“சரி வா, நீ இப்போ இருக்கிற நிலையில உன்னால பேச முடியாது. முதலில் லஞ்ச் சாப்பிடலாம். குழந்தையும் உன்னை ரொம்ப நேரமா மிஸ் பண்றா. வா, சாப்பிட்டுட்டு அப்புறமா பேசலாம்” என்று வற்புறுத்தி அவளை வெளியே அழைத்துச் சென்றார் கஸ்தூரி. மாதினி நல்லவேளையாக நர்ஸுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள். சிற்பிகாவைக் கண்டதும் தாவிவிட்டாள். “தேங்க் யூ ஸிஸ்டர்” என்று நன்றி தெரிவித்துவிட்டுக் குழந்தையுடன் வீட்டின் டைனிங் ரூமுக்குச் சென்றாள். முகத்தைக் கழுவிக்கொண்டு புத்துணர்வுடன் திரும்பி வந்தாள் சிற்பிகா. குழந்தையும் பெரியவர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

மாதினி எப்போதும் அநாவசியமாக அழுவதில்லை. புதியவர்களிடம் போகத் தயங்குவதுமில்லை என்பதால் சிற்பிகாவிற்கு சௌகர்யமாகவே இருந்தது. ஆனாலும், அவளுடைய இந்த குணத்தால் யாராவது அவளை எளிதாகக் கடத்திவிடலாம் என்று சிற்பிகாவிற்குச் சற்று பயமாகவும் இருந்தது.

மாதினியை மடியில் வைத்துக் கொண்டே மதிய உணவைச் சாப்பிட்டாள். பசியும், துக்கமும் சேர்ந்து கபகபவென்றிருந்தது வயிறு. ரொட்டி, தால், சப்ஜி, சாதம், சாலட் என்று நல்ல ஆரோக்கியமான உணவு உள்ளே சென்ற பின்னர் வயிறு சற்று அமைதியானது. மனமும் தெளிவானது. தன் மீது அக்கறை காட்டி அன்போடு வழிகாட்டும் இந்தப் பெரியவர்களிடம் இனி உண்மைகளை மறைக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்தாள் சிற்பிகா. குழந்தையை அங்கே உதவிக்கு இருந்த தீதியிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக நடந்த குழப்பங்களை எல்லாம் கொட்டிவிட்டாள்.

மடை திறந்த வெள்ளமாக அவளுடைய வாயிலிருந்து வந்த சொற்கள், அவர்களுடைய செவிகளில் தஞ்சம் புகுந்தன. அவற்றை கிரகித்துக் கொண்டு, அவர்கள் சிற்பிகாவைப் பார்த்த பார்வையில் திகைப்பு, வருத்தம், கருணை எல்லாமே கலந்திருந்தன. “இத்தனை விஷயங்கள் நடந்திருக்கு… எப்படிம்மா இதையெல்லாம் தாங்கிக்கிட்டே? தனியாவே மனசுக்குள்ள அடக்கி வச்சுக்கிட்டு இவ்வளவு தூரம் திண்டாடியிருக்கியே? இப்பத்தான் உன்னோட இக்கட்டான நிலைமையை எங்களால் புரிஞ்சுக்க முடியுது! ” என்று அவர்கள் கூறியபோது, உண்மையான அக்கறை இருந்தது அவர்களுடைய குரல்களில்.”நானோ ஒரு லாயர்.

அதுவும் இவ்வளவு வருஷ அனுபவமுள்ள ஸீனியர் அட்வகேட். எங்கிட்ட கன்ஸல்ட் செஞ்சு ஏதாவது உதவி கேட்டிருக்கலாமே, சிற்பிகா? தனியாவே எத்தனை நாள் போராடுவே? சரி, பரவாயில்லை. இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போகலை. என்னால ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கறேன்” என்று உறுதி அளித்தார் கஸ்தூரி.

“சரி சிற்பிகா, நான் திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். நீ ரகுநந்தன்கூடப் போவது நல்லது. அவனோட இடத்துல நீ போய் நிம்மதியாகச் சில மாதங்கள் தங்கு. குழந்தைக்கும் அந்த இடம் நல்லா ஒத்துப் போகும். அருமையான வெதர் அங்கே. பொல்யூஷன் அதிகம் இல்லாமல், இயற்கை அழகு சூழ்ந்துள்ள ஆரோக்கியமான இடம். ரகுநந்தன் ரொம்ப நல்லவன்.

முக்கியமாக நாட்டுக்காகத் தன்னலமில்லாத சேவை செஞ்ச ஸோல்ஜர். ஒரு காயம் பட்ட சோல்ஜருக்கு உதவி செய்யறது நம்முடைய தேசத்திற்கு உதவி செய்வதற்குச் சமானம். ஒரு டெரரிஸ்ட் என்கௌன்டரில் பயங்கரமாக அடிபட்டு ஹாஸ்பிடலில் நினைவில்லாமல் பல நாட்கள் கிடந்தவன். எப்படியோ உயிர் பிழைச்சு எழுந்து வந்திருக்கான். அவனுக்கு உதவி செஞ்சா உனக்கும் மன நிம்மதி கிடைக்கும்” என்று மீண்டும் தன்னுடைய கருத்தை அவர் வலியுறுத்தியபோது சிற்பிகாவும் யோசிக்க ஆரம்பித்தாள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *