India
oi-Vigneshkumar
இட்டாநகர்: இமயமலையில் இந்தியாவை நோக்கி பாயும் யார்லுங் சாங்போ நதி, அதாவது நமது நாட்டில் சியாங் என அழைக்கப்படும் நதியில் சீனா ஒரு பிரம்மாண்ட அணையை கட்டி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் அது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கூட மாறலாம் என கருதும் இந்தியா, அதை சமாளிக்கும் வகையில் மற்றொரு அணையை கட்டுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
சீனாவின் பிரம்மாண்ட நீர்மின் திட்டத்துக்கு நடுவே, இந்தியாவின் நீர் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் வலுப்படுத்த அருணாச்சல பிரதேசத்தில் சியாங் மெகா அணைம் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சியாங் மெகா அணை திட்டத்துக்கு எதிராக அருணாச்சல பிரதேசத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்தியா கட்டும் அணை
சுமார் 11,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த Siang Upper Multipurpose Project, மின்சார உற்பத்தி மட்டுமின்றி நீரை சேமித்து வெள்ள அபாயத்தை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தால் தங்கள் பூர்வீக நிலங்கள், கிராமங்கள், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திபெத்தில் கிழக்கு நோக்கி பாயும் யார்லுங் சாங்போ நதி, இமயமலையை கடந்து அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழைந்ததும் சியாங் என அழைக்கப்படுகிறது. பின்னர் அசாமில் பிரம்மபுத்திரா நதியாக பாய்ந்து வங்கதேசத்தை அடைகிறது.
சீனா
இந்த நதியின் மேல்பகுதியில் சீனா சுமார் 60,000 மெகாவாட் திறன் கொண்ட மெடாக் நீர்மின் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் 2025 ஜூலையில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நதியின் மேல்பகுதியில் நீரை சேமிக்கவும் அதன் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அணை உருவாக்கப்படுவது, இந்தியாவின் நீர் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
சீனாவின் இந்த திட்டத்தை தொடர்ந்தே இந்தியாவும் தனது பகுதியில் சியாங் மெகா அணை கட்ட திட்டமிட்டது. சியாங் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, இந்திய பகுதியில் அதிகளவு நீரை சேமித்து, நதியின் ஓட்டத்தை நிர்வகிக்கும் திறனை அதிகரிப்பதாகும். இது தொடர்பாக அருணாச்சல பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்ன், “சீனாவின் மெடாக் திட்டத்தில் சுமார் 5.5 பில்லியன் கன மீட்டர் நீரை சேமிக்க முடியும். அதேநேரம் நமது சியாங் திட்டத்தில் சுமார் 9.2 பில்லியன் கன மீட்டர் நீரை சேமிக்க முடியும்” என்றார்.
இந்தியாவின் பதிலடி
இருப்பினும், நீரை சேமிக்கும் திறன் அதிகமாக இருப்பதால் மட்டுமே சீனாவின் அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்தியா முழுமையாக தடுத்துவிட முடியும் என்று கூற முடியாது. அணையின் இறுதி வடிவமைப்பு, அதன் ஆபரேஷன், மேல்பகுதியில் இருந்து வரும் நீரின் அளவு மற்றும் வெளியேற்றப்படும் நேரம் உள்ளிட்ட அம்சங்களே அதன் உண்மையான பலனை தீர்மானிக்கும்.
சியாங் மற்றும் பிரம்மபுத்திரா ஆற்று பகுதிகளில் கனமழை, இமயமலை அமைப்பு, திடீரென மாறும் நீரோட்டம் ஆகியவற்றால் வெள்ள அபாயம் உள்ளது. இதுபோன்ற இடங்களில் பெரிய அணைகள் கட்டப்படும்போது, அதிகப்படியான நீரை சேமித்து, வெள்ளம் ஏற்படாதவாறு பொறுமையாக அவற்றை வெளியேற்ற முடியும். அதாவது இந்த அணையால் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமில் வெள்ள ஆபத்துகள் பெருமளவு குறையும்.
இந்தியாவின் மிக பெரிய நீர்மின் திட்டங்களில் ஒன்றாக உருவாக்கவும் இந்த சியாங் அணையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி, தேசிய மின்சார நெட்வொர்க்கிற்கும் கூட மின்சாரம் கிடைக்கும். வேலைவாய்ப்புகள், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்படும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும். 11,200 மெகாவாட் என்பது எதிர்பார்க்கப்படும் நம்பர் தான் என்றாலும் கூட கணிசமான மின்சாரம் நிச்சயம் கிடைக்கவே போகிறது.
ஏன் பழங்குடியினர் எதிர்க்கிறார்கள்?
சியாங் பள்ளத்தாக்கில் வாழும் ஆதி பழங்குடியின மக்கள் தான் இந்த அணையை கடுமையாக எதிர்க்கிறார்கள். சியாங் அணையால் பல கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கலாம் என்றும் வாழ்வாதாரம், பாரம்பரிய பகுதிகள், கலாச்சார அடையாளம் ஆகியவை பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். கிழக்கு இமயமலை பகுதியின் நிலநடுக்க அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகரிக்கும் என கவலை எழுப்பியுள்ளனர்.
அதேநேரம் தற்போது திட்டம் ஆரம்பகட்ட ஆய்வு பணியில் இருப்பதாகவும், ஆய்வு நடப்பதாலேயே இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆய்வு பணிகளின் போதே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் திட்டத்தை வேகமாக அரசு செயல்படுத்திவிடும் என மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் போராட்டங்கள் பாதுகாப்புப் படையினருடனான மோதல்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் வன்முறை சம்பவங்களாகவும் தீவிரமடைந்துள்ளன.
அடுத்து என்ன நடக்கும்?
திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் ஆரம்பக்கட்ட அறிக்கை தயாரிப்பதே அடுத்த முக்கிய நடவடிக்கையாகும். இதற்கு பிறகு விரிவான தொழில்நுட்ப ஆய்வுகள், சுற்றுச்சூழல் மதிப்பீடுகள், தேவையான அனுமதிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். அதன் பிறகே அணையின் கட்டுமானம் தொடங்கும்.
சீனாவின் நீர்மின் திட்டத்தால் சியாங் அணை நிச்சயம் தேவை என்று சொல்லப்பட்டாலும் கூட, இந்திய திட்டம் உண்மையில் எந்த அளவுக்கு நீர் மற்றும் வெள்ள மேலாண்மைக்கு உதவும் என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபிக்க வேண்டியது அவசியம்!