சுற்றி வளைத்த டிரோன்கள்.. அடுத்த நொடி வான் உயரத்திற்கு தீப்பிழம்பு.. ரஷ்யாவின் அமேசான் கிடங்கு காலி | Ukraine Drone Strike Hits Russia Wildberries Warehouse and Massive Fire Erupts Near Moscow

Spread the love

International

oi-Vigneshkumar

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் கிடங்கை குறிவைத்து உக்ரைன் மிக பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன் தாக்குதல் காரணமாக பல நூறு அடி உயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. என்ன நடந்தது.. இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தொடங்கி பலரும் தீவிர முயற்சியை எடுத்துவிட்டனர். இருப்பினும், போர் முடிவது போல தெரியவில்லை. அவ்வப்போது இரு நாடுகளுமே மிக பெரிய தாக்குதல்களை நடத்தியும் வருகிறது.

Ukraine Russia drone attack Ukraine drone attack

மிக பெரிய தாக்குதல்

இந்த சூழலில் தான் ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தில் உக்ரைன் ஒரு பிரம்மாண்ட டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் அந்நாட்டின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்தின் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. கிடங்கில் இருந்து கரும்புகை வானை நோக்கி எழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்று ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் சமீப காலங்களில் உக்ரைன் நடத்திய மிக பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்று இது என்று சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 45 கி.மீ. தெற்கே உள்ள கோலெடினோ பகுதியில் வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்தின் மிக பெரிய கிடங்கு அமைந்துள்ளது. இதை குறிவைத்து தான் உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.இந்த ட்ரோன் தாக்குதலில் வளாகத்தில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

பல நூறு அடிக்கு தீ

சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகளில், கிடங்கின் பல பகுதிகளில் கொழுந்துவிட்டு தீ எரிவதும், அதை தொடர்ந்து அடர்த்தியான கரும்புகை பல நூறு அடி உயரத்துக்கு எழுவதும் தெரிகிறது. மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள மற்றொரு மையத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தங்களது மையத்தில் தீ ஏற்பட்டதை வைல்ட்பெர்ரிஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. அதேநேரம் பாதுகாப்பு நடைமுறைகளின்படி ஊழியர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதாகவும் இதனால் மோசமான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. கிடங்கு தீப்பற்றி எரிந்ததால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஆர்டர்களை கையாளும் பணிகள் வேறு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைல்ட்பெர்ரிஸ் தெரிவித்துள்ளது.

தீவிர தாக்குதல்

இந்த தாக்குதல் தனிப்பட்ட சம்பவம் அல்ல.. ரஷ்யா முழுவதும் பல்வேறு பகுதிகளை குறிவைத்து மிக பெரிய அளவில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் 822 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. குறிப்பாக தலைநகர் மாஸ்கோவை நோக்கி மட்டும் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வந்ததாக மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியான் தெரிவித்துள்ளார். மாஸ்கோ பிராந்தியத்தில் செயல்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 187 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்!

உக்ரைன் இந்த தாக்குதலில் வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்தின் கிடங்குகளை குறிவைத்தே தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவின் அமேசான் நிறுவனம் என்று அழைக்கப்படும் வைல்ட்பெர்ரிஸ், நாட்டின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகும். ஒவ்வொரு நாளும் இது பல லட்சம் ஆர்டர்களை பிராசஸ் செய்கிறது. கடந்த சில வாரங்களாகவே அந்நிறுவனத்தின் பல்வேறு மையங்களை குறிவைத்தே உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்புகள் ராணுவம் தொடர்பான பொருட்கள், ட்ரோன் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே அதை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *