சுவிட்ச் அழுத்தினால் ஆட்டோ வரும் விபத்தை தடுக்க கேரள ஓட்டுநர்கள் ஏற்படுத்திய வயர்லெஸ் தொழில்நுட்பம்!

Spread the love

கேரள மாநிலம் கொச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளின் வசதிக்காக எளிய ‘வயர்லெஸ் காலிங் பெல்’ தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அது தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.​ தேசிய நெடுஞ்சாலை 66-ல் வடக்கு பறவூரிலிருந்து கொடுங்கல்லூர் செல்லும் பாதையில் மூத்தகுன்னம் லேபர் சந்திப்பு அமைந்துள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள், ஆட்டோ நிலையத்திற்குச் செல்ல 50 மீட்டர் தொலைவில் உள்ள ஆபத்தான வளைவுச் சாலையைக் கடக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் அப்பகுதியில் தொடர் விபத்துகளும், பயணிகளுக்கு கடும் சிரமமும் ஏற்பட்டு வந்தது.

​இதற்குத் தீர்வாக, பயணிகள் சாலையைக் கடக்காமல் பேருந்து நிறுத்தத்திலிருந்தே தங்களை எளிதாக அழைக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் ‘மனு’ என்பவர் ஒரு யோசனையை முன்வைத்தார். இதனை அந்த நிலையத்தைச் சேர்ந்த மற்ற 29 ஓட்டுநர்களும் முழு மனதுடன் வரவேற்றனர். அதன்படி அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் சேர்ந்து ஆளுக்கு குறிப்பிட்டத் தொகையைப் பகிர்ந்து மொத்தம் ரூ.3,500 செலவில் சென்சார் முறையில் இயங்கும் ‘வயர்லெஸ் அலாரம்’ அமைப்பை வாங்கினர். ​பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஒரு மருந்தகத்தின் இரும்புத் தூணில் பயணிகள் அழுத்துவதற்கான ‘வயர்லெஸ் சுவிட்ச்’ பொருத்தப்பட்டுள்ளது.

​அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள ஆட்டோ நிலையத்தின் மின்கம்பத்தில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. ​பேருந்தில் வந்து இறங்கும் பயணிகள் அந்த சுவிட்சை அழுத்தினால், ஆட்டோ நிலையத்தில் உள்ள ஸ்பீக்கரில் ஒலி எழுப்பும். உடனே வரிசையில் முதலில் நிற்கும் ஆட்டோ புறப்பட்டுப் பயணியின் அருகில் சென்றுவிடும். வாகன நெரிசல் மிகுந்த சாலையைக் கடந்து சென்று ஆட்டோவை அழைக்க வேண்டிய அவசியமில்லை; வெயிலிலும் மழையிலும் நின்று கையசைத்து காத்திருக்கவும் தேவையில்லை.

முதலில் சாதாரண பேட்டரிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை பேட்டரியை மாற்றும் செலவைத் தவிர்க்க தற்போது ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி முறைக்கு மாற்றியுள்ளனர். பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக சுவிட்ச் அருகே வழிகாட்டுதல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த எளிய தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதுடன், ஓட்டுநர்களுக்கும் சவாரி தவறாமல் கிடைக்கிறது. நாளுக்கு நாள் இந்த சுவிட்சைப் பயன்படுத்தி ஆட்டோவை அழைக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஓட்டுநர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *