Tamilnadu
oi-Pavithra Mani
திருச்செந்தூா்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது. முருகர் சூரபத்மனை வதம் செய்வதை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சனிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதிய வேளையில் உச்சி கால அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதானைகளம், கிரிவலமும் வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

சூரசம்ஹாரம்
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. விஸ்வரூப தரிசனம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண்பதற்காக பக்தர்களுக்கு தனி வரிசைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் எல்லையில் தற்காலிக பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோயிலைச் சுற்றி கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் முதலுதவி மையங்கள் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை போன்றவை தயார் நிலையில் உள்ளன. காலை முதலே கடற்கரை, கோவில் வளாகம், நாழிக்கிணறு அன்னதான மண்டபம், கோவில் நிர்வாக அலுவலகம் என பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் தலைமையில், திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.