
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியார் விடுதியில் மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சு.ஜிவனிடம், “மதிமுகவைப் போல அதிமுகவும் ஆகிவிடும். இன்னும் சில நாட்களில் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள்; தொண்டர்கள் இருக்கமாட்டார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளாரே?” என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “உண்மையைச் சொன்னால் கொஞ்சம் கசக்கும். ஆனால் நான் உண்மையைத்தான் பேசுவேன். தவெக தொடங்கும்போது செங்கோட்டையன் தவெகவில் இல்லை. நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இல்லை.
அவர்கள் வேறு இடங்களில் குடும்பம் நடத்திவிட்டு, இங்கு வாடகை வீட்டுக்கு வந்தவர்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அவர்களின் தரம் அப்படித்தான் இருக்கும். நாளை தவெகவின் நிலையில் சறுக்கல் ஏற்பட்டால், இன்னொரு இடத்திற்கு வாடகைக்கு செல்வார்கள்.
அதனால் அவர்களைப் பற்றி பெரிதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை” எனக் கடுமையாக விமர்சித்தார்.
தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாஞ்சில் சம்பத்தை விமர்சித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன் தெரிவித்த இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.