செஞ்சி சிறுமி மாயம்: 100-க்கு வந்த போன் கால்.. கடலூரில் CBCID தீவிர விசாரணை! – Kumudam

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி இன்றுடன் 24 நாட்கள் நிறைவடையும் நிலையில், அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க சிபிசிஐடி காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இவ்வழக்கை கடந்த 14 நாட்களாகச் சிபிசிஐடி அதிகாரிகள் கையில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சிறுமியைத் தேடும் பணியிலும், சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை நடத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை சிறுமி குறித்து எந்தவொரு உறுதியான தகவலோ அல்லது வழக்கில் கணிசமான முன்னேற்றமோ எட்டப்படவில்லை.

இதனிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் நாமக்கல் ஆகியப் பகுதிகளில் சிறுமியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரைக் கண்டதாகக் சிபிசிஐடி போலீசாருக்குத் தகவல்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில், அங்குச் சென்றுள்ள சிபிசிஐடி அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மற்றொருபுறம், ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபர்களிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (43) என்ற கொத்தனார், சில தினங்களுக்கு முன்பு புவனகிரி காந்தி சிலை அருகிலுள்ள சலூன் கடையில் இருந்தபோது, ஒரு தாயும் சிறுமியும் வந்து யாசகம் கேட்டதாகவும், அவர்களுக்குத் தான் ரூ.100 வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்று செய்தி பார்த்தபோது, செஞ்சியில் மாயமான சிறுமி ஹேமலதாவின் தோற்றமும், தன்னிடம் யாசகம் கேட்ட சிறுமியின் தோற்றமும் ஒரே மாதிரி இருந்ததாகக் கூறி அவசர உதவி எண் 100-க்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலின் பேரில் புவனகிரி காவல்துறையினர் மற்றும் மாவட்டக் குழந்தை நல ஆலோசகர் ஆகியோர் அருள்ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருள்ஜோதி குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பிறகே அருள்ஜோதி அளித்த புகாரின் உண்மைத்தன்மை தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *