“செத்து போய் இருப்பேன்..” மம்தாவை நோக்கி கல் வீச்சு.. திடீரென சூழ்ந்து தாக்கிய கும்பலால் பரபரப்பு | Mamata Banerjee Car Attacked in West Bengal: Protesters Throw Mud, Bottles, Slippers at her convoy

Spread the love

India

oi-Vigneshkumar

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் கார் தாக்கப்பட்டுள்ளது. தொண்டர் ஒருவரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற மம்தாவின் காரை மறித்து தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஹாலிஷஹார் பகுதியில் திரிணாமுல் தொண்டர் பிர்ஜு கியோட் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரை சந்திக்க மம்தா நேரில் சென்றுள்ளார். அப்போது தான் அவரது காரை மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

West Bengal Mamata India

தாக்குதல்

ஹாலிஷஹாரில் மம்தா பானர்ஜியின் வாகனத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கார் மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். மேலும் தண்ணீர் பாட்டில்கள், செருப்பு உள்ளிட்ட பொருட்களையும் வீசியதாக கூறப்படுகிறது. மேலும், மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.

திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரான பிர்ஜு கியோட் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கியோட் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் காவலில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

பின்னணி

கியோட் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது மனைவி வேறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது போலீஸ் காவலில் தனது கணவர் கடுமையாக தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

என்ன நடந்தது

இந்த விவகாரம் அரசியல் மோதலாக மாறிய நிலையில், பிர்ஜு கியோட்டின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மம்தா பானர்ஜி ஹாலிஷஹாருக்கு சென்றார். ஆனால், அவர் குடும்பத்தினரை சந்திக்கும் முன்பாகவே அவரது வாகனத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. போராட்டம் தீவிரமடைந்ததால் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மம்தா பானர்ஜியின் வாகனம் பாதுகாப்பாக அந்த பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டது.

தனது கார் மீது சமூக விரோதிகள் போலீசார் முன்னிலையிலேயே பெரிய கற்களை வீசியதாக மம்தா சாடியுள்ளார். மேலும், தாக்குதல் மிகவும் தீவிரமாக இருந்ததாகவும், காரின் ஜன்னல்கள் திறந்திருந்தால் தனது தலையில் கல் பட்டு படுகாயம் அடைந்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். போலீசார் தங்களை பாதுகாக்கவில்லை என்றும், பாஜகவினருக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.

மறுப்பு

இருப்பினும், மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. மம்தாவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என்று மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமிக் பட்டாச்சார்யா கூறினார்.

பாஜக அமைச்சர் அக்னிமித்ரா பாலும் தாக்குதலை கண்டித்தார். அவர் மேலும், “மம்தா பானர்ஜியின் ஆட்சியை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால், அவரை தாக்குவது, துன்புறுத்துவது அல்லது அவர் மீது சேறு, மை, செருப்பு உள்ளிட்டவற்றை வீசுவதை பாஜக ஆதரிக்காது” என்று அவர் தெரிவித்தார்.

திரிணாமுல்

பிர்ஜு கியோட் மரணம் தற்போது மேற்கு வங்கத்தில் புதிய அரசியல் மோதலுக்கு வழிவகுத்துள்ளது. போலீஸ் காவலில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக திரிணாமுல் தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதனால் அவரது மரணம் தொடர்பான உண்மைகள் வெளிவர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை திரிணாமுல் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், அவர் உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்ததாக ஆளும் பாஜக அரசு கூறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *