தமிழ்நாட்டில் இன்றைக்கு இளைய தலைமுறையினர் பெரும்பாலனோர் அதிக விரும்பி ஒரு செயல்பாட்டினை வைத்துள்ளனர். ஆனால் அதன் பின் விளைவுகள் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் இதனை வழக்கமாக அதிமானோர் நடைமுறையில் இருந்து வருகிறது.
இப்போது இருக்கக்கூடிய GEN Z, Y , X , ALPHA ஆகிய தலைமுறையினரை விரும்பி செய்யக்கூடிய செயலாக இருக்கக்கூடியதாக மாறியிருக்கிறது இந்த டாட்டூ எனப்படும் பச்சை குத்தும் கலாசாரம்.
இதற்கு முன்பு உள்ள தலைமுறையினர் மதம், சமூக அந்தஸ்து அல்லது காதலின் நினைவாக அல்லது சின்னமாக பச்சை குத்துப்பட்ட நிலையில், தற்போது இது பெரும்பாலும் ஃபேஷனின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இதனால் ஷாப்பிங் மால்கள், சாலையோரங்கள், ரயில்வே நிலையங்கள் என பல இடங்களிலும் டாட்டூ ஸ்டுடியோக்கள் அதிகரித்து வருகின்றன.
இப்போது இந்த டாட்டூ குத்துத்தல் அதிகமாக பயன்பாட்டில் இருப்பதால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையும் அதன் தீமைகள் என்னவென்று அறியாமல் இதனை குத்தி வருகின்றனர். ஆனால், டாட்டூ குத்துவதால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் குறித்து பலரும் போதிய விழிப்புணர்வுடன் இருப்பதில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டாட்டூவால் பரவும் தொற்றுகள்
டாட்டூ குத்தும்போது ஊசி மூலம் சருமத்தில் மை செலுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஊசி முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாமல் இருந்தால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.
குறிப்பாக HIV, ஹெபடைடிஸ் B, ஹெபடைடிஸ் C உள்ளிட்ட ரத்தத்தின் மூலம் பரவும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில வகையான தோல் காசநோய் போன்ற தொற்றுகளும் டாட்டூ மூலம் பரவக்கூடும் எனக் கூறப்படுகிறது.
சிலருக்கு டாட்டூ ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்
டாட்டூ மைகளில் பல்வேறு நிறங்களிலான பிக்மென்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட சில நிற மைகள் சிலருக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், டாட்டூவை பின்னர் நீக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் சிக்கல்கள் ஏற்படலாம். சில நிறங்களை லேசர் சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றுவது கடினமாக இருக்கலாம்.
கீலாய்டு இருப்பவர்கள் கவனம்!
சிலருக்கு காயம் ஏற்பட்டால், சாதாரணமாக தழும்பு ஏற்படுவதற்குப் பதிலாக அது தடிமனாகவும் பெரிதாகவும் வளரும் தன்மை இருக்கும். இதனை கீலாய்டு (Keloid) என்கிறார்கள். இத்தகைய கீலாய்டு ஏற்படும் தன்மை கொண்டவர்கள் டாட்டூ குத்துவதைத் தவிர்ப்பது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். டாட்டூ குத்திய பிறகு கீலாய்டு உருவானால், அதை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கலாம்.
முகத்தில் டாட்டூ குத்தினால்?
தற்போது கைகள், கால்கள் மட்டுமின்றி முகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளிலும் டாட்டூ குத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. முகத்தில் டாட்டூ குத்தும்போது சிலருக்கு சருமப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
டாட்டூவை அகற்றுவதும் எளிதல்ல
ஒரு கட்டத்தில் டாட்டூ பிடிக்காமல் போகலாம் அல்லது வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அதை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது லேசர் சிகிச்சை மூலம் டாட்டூவை அகற்ற முயற்சிக்கின்றனர்.
ஆனால், டாட்டூ குத்துவதைக் காட்டிலும் அதை அகற்றுவதற்கான செலவு பல மடங்கு அதிகமாக இருக்கலாம். மேலும், லேசர் சிகிச்சைக்குப் பிறகு சருமத்தின் இயல்பான நிறத்தில் மாற்றம் ஏற்படுவது, குறிப்பிட்ட நிற மைகள் முழுமையாக நீங்காமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம்.
டாட்டூ மையின் நிறமிகள் உடலில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் தேங்குவதற்கான வாய்ப்பும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டாட்டூ ஸ்டுடியோ தேர்வில் கவனம்
டாட்டூ குத்த விரும்புபவர்கள் முறையான பயிற்சி மற்றும் அனுபவம் கொண்ட கலைஞர்களிடம் மட்டுமே செல்வது முக்கியம். பயன்படுத்தப்படும் மை தரமானதா, அதில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியாக புதிய ஊசிகளைப் பயன்படுத்துவது அவசியம். ஊசிகள் மற்றும் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் முறையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்
டாட்டூ கலைஞர்கள் சிலர் வாடிக்கையாளர்களிடம் டாட்டூ குத்துவதற்கு முன்பு உடல்நலம் தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவத்தைப் பூர்த்தி செய்யச் செய்கின்றனர்.
சரும நோய், சர்க்கரை நோய், இருதயப் பிரச்சினை, HIV, ஹெபடைடிஸ் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளதா என்பதுடன், சில மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்களா என்பதும் கேட்கப்படுகிறது. சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே டாட்டூ குத்தப்படுவதாகவும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மது அருந்திய நிலையில் வருபவர்களுக்கு டாட்டூ குத்துவதைத் தவிர்ப்பதாகவும் சில டாட்டூ கலைஞர்கள் கூறுகின்றனர்.
சிறார்களுக்கு டாட்டூ குத்துவதில் கட்டுப்பாடு
17 வயது போன்ற சிறிய வயதினர் டாட்டூ குத்திக்கொள்ள ஆர்வத்துடன் வருவதாகவும், குறிப்பாக எதிர்காலத்தில் காவல்துறை அல்லது ராணுவம் போன்ற பணிகளில் சேர விரும்புபவர்கள் பின்னர் டாட்டூ காரணமாக சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் டாட்டூ கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வயது மற்றும் அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே டாட்டூ குத்தும் நடைமுறையை சில ஸ்டுடியோக்கள் பின்பற்றுகின்றன. சிறார்கள் வந்தால் பெற்றோரிடம் தொடர்புகொண்டு உறுதி செய்த பின்னரே அனுமதிப்பதாகவும் கூறுகின்றனர்.
வாழ்நாள் முழுவதும் உடலோடு இருக்கும் முடிவு!
டாட்டூ என்பது ஒருமுறை குத்திய பிறகு நீண்ட காலம் உடலுடன் பயணிக்கும் ஒன்றாகும். எனவே, ஃபேஷன் அல்லது தற்காலிக ஆசைக்காக உடனடியாக முடிவெடுக்காமல், உடல்நிலை, பயன்படுத்தப்படும் மை, ஊசி மற்றும் ஸ்டுடியோவின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு முடிவு செய்வது அவசியம்.

