திருநங்கை ஸ்மிதாவின் உத்வேகம் தரும் பேட்டி: சமூகத் தடைகளைத் தாண்டி சாதித்த கதை \ The Inspiring Interview of Transgender Smita: The Story of Overcoming Societal Barriers and Succeeding

Spread the love

சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ போராடும் திருநங்கை ஸ்மிதா அவர்களிடம் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம்..

“என்னோட சொந்த ஊரு மதுரை பக்கத்துல உசிலம்பட்டி. எனக்கு அப்பா அம்மான்னு யாரும் இல்லை. நான் திண்டுகல்”ல உள்ள “அவேக் கருணை இல்லம்”-ன்ற அசிரமத்துலதான் வளர்ந்தேன். அங்கயே பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். என்னோட சின்ன வயசுலேந்தே கோலம் போடுறது, படம் வரையுறது, ஆடுறது, பாடுறதுன்னு எல்லாமே நல்லா பண்ணுவேன்.

எனக்குப் பன்னிரெண்டு வயசு இருக்குறப்பதான் திருநங்கைங்கின்றதே உணர ஆரம்பிச்சேன். பதினைந்து வயசு இருக்கும்போது சுத்தி உள்ளவங்கள்டையும் சொன்னேன். அவங்களால ஏத்துக்க முடியல. ஒரு கட்டத்துக்கு மேல என்னால ஆசிரமத்துல இருக்க முடியல. அங்கேருந்து வெளிய வந்து, பக்கத்துல இருந்த மற்ற திருநங்கைகள் கூட சேர்ந்து இருந்தேன்.

அப்போ, டிப்ளமோ படிச்சிட்டு இருந்ததுனால, காலேஜ் ஃபீஸ்ஸ ஆசிரமத்துல கொஞ்சம் கட்டுனாங்க. மீதிய நானே ஹோட்டல்ல வேலைக்குப் போயி கட்டுனேன். படிக்கும்போதே அடிக்கடி சென்னை வருவேன். படிச்சதுக்கு அப்பறம் சென்னை வந்து வேலை தேடிப் பார்த்தேன். படிச்ச படிப்புக்கும் இங்க வேலை கொடுக்கல.

ஏன் ஒரு சின்ன ஹோட்டல் வேலை கூட தரல. நான் திருநங்கைன்றதுனால, பஸ் ஸ்டாண்டுல பொது இடத்தில் தூங்குறது, பப்ளிக் பாத்ரூம யூஸ் பண்றதுன்னு நெறையா கஷ்டபட்டு இருக்கேன். பெயிண்ட் அடிக்கிறது, ஓவியம் வரையுறது, வீடு ரினோவேட் பண்றது, விஷேசங்களுக்கு அலங்காரம் பண்றதுன்னு கிடைக்கிற ஒவ்வொரு வேலையா செய்ய ஆரம்பிச்சேன்.

திருநங்கை ஸ்மிதா

திருநங்கை ஸ்மிதா

இப்ப வாடகை வண்டி எடுத்து ஸ்வீகி, சோமெட்டோல ஃபுட் டெலிவரி பண்றேன். விடியற்காலையில டீ விக்கிறேன். எண்ணூரில் சங்கிலிக் கருப்பர் ஆலயத்தில் தங்கி பூசாரியாக இருக்கேன்.

இதுல கிடைக்கிற வருமானத்துல என்னால முடிஞ்ச அளவுக்கு அனாதை குழந்தைகளுக்கும், முடியதவங்களுக்கும் செஞ்சிட்டு வரேன்” என்றவரிடத்திடத்தில், இந்த வேலையின் அனுபவங்களைப் பற்றி கேட்டோம், “இந்த வேலைக்கு அப்ளே பண்றதுக்கு ஆண், பெண்ணுன்னு இரண்டே ஆஃப்சன் மட்டும் தான் இருந்துச்சே. நான் அலுவலகத்துல நேர்ல போயி பேசித்தான் இந்த வேலையே வாங்குன. நம்ம சாப்பாடு எடுத்துட்டு போனோம்னா, நீயான்னு கேட்டுட்டு காச மூஞ்சியிலேவிட்டு எரியிறது, முகத்தைச் சுழிகிறதுன்னு பல பேர் இருந்தாலும், அன்பா பேச ஒருசிலரும் இருக்காங்க.

ரொம்ப நேரம் காத்திருக்கிறது, எத்தனை அடுக்கு மாடியா இருந்தாலும் படி ஏறி போய் கொடுக்கிறதுன்னு இந்த வேலை ரொம்ப கஷ்டம்தான். கூடிய சீக்கிரம் நானும் ஒரு தள்ளு வண்டி கடை வச்சிட்டு ஒரு இடத்துல உக்காரணும்ன்னுதான் நினைக்கிறேன். திருநர்கள் எல்லாரும் கண்டிப்பா படிங்க .

திருநங்கை ஸ்மிதா

திருநங்கை ஸ்மிதா

நல்ல வேலைக்குப் போங்க. அப்பதான் மத்தவங்க நம்மள பத்தி தவறான நினைக்கிற கண்ணோட்டத்தை மாத்த முடியும். யாரும் வாய்ப்பு கிடைக்கலன்னு வருந்தபடாம மனம் தளராமா தொடர்ந்து முயற்சி செய்யயுங்க. படிச்சி முன்னுக்குப் வரணும்னு நினைக்கிற எங்களைப் போல உள்ளவங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அரசு சிறப்புப் பிரிவில் இடஓதுக்கீடு கொடுத்தா நல்லா இருக்கும் என்ற கோரிக்கையோடு முடித்தார்.

திருநங்கைகள் அனைவரையும் சக மனிதராக மதித்து நடக்க வேண்டும். யாசகம் கேட்கிறார்கள், பாலியல் வன்புணர்வில் ஈடுபடுகிறார்கள் என மட்டம் தட்டும் இந்தச் சமூகம் அவர்களுக்கான வேலை வாய்ப்பினை வழங்க மறுக்கிறது. சக மனிதரைப் போல் மேல ஏற விடாமல் தடுக்கிறது.

இப்படியான நிலையில் இவர்கள் தங்களின் திறமைகளை நிரூப்பிக்க திண்டாடுகிறார்கள். திருநங்கைகளை மனிதராக மதியுங்கள். அவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க முன் வாருங்கள்” என்று கோரினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *