தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நாஞ்சில் சம்பத் எந்த நேரமும் வெளியேறலாமெனத் தெரிய வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தந்தார் விஜய்.
தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக சம்பத்தும் பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு மதிமுக, தவெக பக்கம் வந்தது. அப்பபோதே சம்பத்திடம் அது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர்.
’வைகோ ஏறுகிற மேடையில் இந்த சம்பத் ஏற மாட்டான்’ எனச் சொல்லியிருந்தார்.
தற்போது தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. அதில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை.

அதேநேரம் வைகோ பெயர் இடம்பிடித்திருந்தது. ஒரு கட்சியின் சார்பில் தரப்படும் பெயர் பட்டியலில் அடுத்த கட்சியின் தலைவர் பெயர் எப்படி இடம் பெறலாம் என திமுக சார்பில் விமர்சனம் வைக்கப்பட்டதும் அந்தப் பெயர் நீக்கப்பட்டது.
இருப்பினும் தவெகவின் பிரசாரக் கூட்டத்தில் வைகோ பேசினார்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான தன்னை பிரச்சாரத்துக்கே அழைக்கவில்லை என நாஞ்சில் சம்பத் கடும் அதிருப்தியில் இருபப்தாகக் கூறப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் சம்பத்.
‘என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது. என் வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது’ என அவர் பதிவிட்டிருந்தது, தவெக மீதான தன் அதிருப்தியை வெளிப்படுத்தவே என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.