சென்னையில் விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஆந்திராவில் மீட்பு – தாய், டாக்டர் சிக்கிய பகீர் பின்னணி – girl child sale in chennai, doctor mother arrested

Spread the love

குழந்தை விற்பனை கும்பல் சிக்கியது எப்படி என நம்மிடம் பேசிய போலீஸார், “சிறையில் இருக்கும் ரௌடி குள்ள கணேஷின் மனைவி பவித்ரா கர்ப்பமாக இருந்ததால், அவரை பெண் போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்தச் சூழலில்தான் பவித்ராவுக்கு குழந்தை பிறந்த தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. ஆனால் வீட்டில் குழந்தை இல்லை. அதனால் சந்தேகமடைந்துதான் பவித்ராவிடம் விசாரணை நடத்தினோம். விசாரணையில் குழந்தையை புரோக்கர்கள் மூலம் விற்றதை பவித்ரா ஒப்புக் கொண்டார். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குழந்தையை விற்ற கும்பலைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.

மருத்துவமனையின் கட்டணம் செலுத்த வழியில்லாத பவித்ரா, வில்லிவாக்கத்தில் பக்கத்து வீட்டில் தனலட்சுமியிடம் வட்டிக்கு பணம் கேட்டிருக்கிறார். அப்போது தனலட்சுமி, இந்தக் குழந்தையை விற்றால் உனக்கும் பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளைக் கூறி வேளச்சேரியைச் சேர்ந்த புரோக்கர் ஆண்டாள் என்பவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இவர், தனக்குத் தெரிந்த இன்னொரு புரோக்கர் துர்கா மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி, செல்வரசி தம்பதிக்கு குழந்தையை விற்க பேரம் பேசியிருக்கிறார்.

கணேசமூர்த்திக்கும் செல்வரசிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. கணேசமூர்த்தி ஆந்திராவில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்து வருவதால் அங்கு தங்கியிருக்கிறார். குழந்தைக்காக ஏங்கிய இந்தத் தம்பதி பவித்ராவின் குழந்தையை 9 லட்சம் ரூபாய்க்கு வாங்க சம்மதித்திருக்கிறார்கள். உடனடியாக பணத்தை வாங்கிய புரோக்கர்கள், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தியதோடு குழந்தையைகணேசமூர்த்தி, செல்வரசியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

உடனடியாக கணேசமூர்த்தி, செல்வரசி குழந்தையோடு ஆந்திராவுக்கு சென்றுவிட்டனர். இந்தத் தகவல் கிடைத்ததும் குழந்தையை ஆந்திராவிலிருந்து மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம். எங்களின் விசாரணையில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜசேகர், மருத்துவமனையின் அட்மின் அலுவலர் விசாலாட்சி ஆகியோருக்கும் குழந்தை விற்பனை குறித்த தகவல் முன்கூட்டியே தெரியவந்திருக்கிறது. அதனால்தான் அவர்களையும் இந்த வழக்கில் சேர்த்திருக்கிறோம். பாலுக்காக குழந்தை அழுது கொண்டே இருப்பதால் இந்த வழக்கில் பவித்ராவை மட்டும் சிறைக்கு அனுப்பாமல் குழந்தையின் நலன்கருதி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என உயரதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். அதனால் இந்த வழக்கில் கைதான 8 பேரை சிறையில் அடைக்கவுள்ளோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *