International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளம்- சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இதற்கிடையே திபெத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், மீட்புப் பணிகளை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. நிலச்சரிவால் உருவான திடீர் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அந்த தடுப்பு உடைந்து மீண்டும் மிக பெரிய வெள்ளம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை நேபாளத்தின் ராசுவா மாவட்டத்திலும், சீனாவின் திபெத் பகுதியில் உள்ள கியிராங் துறைமுகம் அருகிலும் பயங்கர பேரழிவு ஏற்பட்டது. மிக பெரிய நிலச்சரிவில் பாறைகள், பனி, மண் மற்றும் தண்ணீர் அதிகளவில் கீழ்நோக்கி அடித்து செல்லப்பட்டன. இதில் கியிராங் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

சீனா எடுத்த முடிவு
இந்த பேரழிவை தொடர்ந்து, திபெத் பகுதியில் பல நூறு பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் சீன மீட்பு குழுக்கள் ஈடுபட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் சீனா தனது மீட்பு பணிகளையே மொத்தமாக நிறுத்தியுள்ளது. ஏனென்றால் நிலச்சரிவு காரணமாக நதியின் வழியில் மிக பெரிய பாறைகள் விழுந்தன. இது இயற்கையாகவே தடுப்புகளை உருவாக்கி, ஏரியை போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இதனால் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
48 மணி நேரம்
இந்த திடீர் ஏறி உடையும்போது மிக பெரிய வெள்ளம் உருவாகும். இது மிக பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், மீட்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக அடுத்த 48 மணி நேரத்தில் வெள்ளம் ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது.
சீனாவின் திபெத் பகுதியில் மட்டும் 550-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் குறைந்தது 260 பேர் வெளிநாட்டினர். குறிப்பாக கைலாஷ் மலைக்கு யாத்திரை சென்றவர்களே அதிகளவில் மாயமானதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்ட பாறைகள் மற்றும் மண் ஆற்றின் சில பகுதிகளை அடைத்ததால், தற்காலிக நீர்த்தேக்கங்கள் உருவாகியுள்ளன. இந்த தடுப்பு உடைந்தால், தேங்கியுள்ள தண்ணீர் மிக பெரிய வேகத்தில் கீழ்நோக்கி பாய்ந்து சீனாவின் திபெத் பகுதிகளிலும், நேபாளத்தின் எல்லைப் பகுதிகளிலும் மீண்டும் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கண்காணிப்பு
நிலைமை எப்போது வேண்டும் என்றாலும் கையை மீறி செல்லும் என்பதால் சீன அதிகாரிகள் கியிராங் துறைமுகத்தை சுற்றியுள்ள நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் புதிய நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே நேபாளத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திரிசூலி பகுதியில் உள்ள நீர்மின் திட்டத்தின் சுரங்கத்திற்குள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக நேபாள ராணுவம் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. ஒவ்வொரு ஹெலிகாப்டரும் 25 பேர் வரை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது.
மீட்பு
வியாழக்கிழமை நீர்மின் திட்டத்தைச் சுற்றியிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் மீட்கப்பட்டனர். எனினும், பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், மீட்பு குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதனால் ஹெலிகாப்டர்களை நம்பியே மீட்பு பணிகளில் நடக்கிறது.
நேபாளம் மற்றும் திபெத் இரு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இதனால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.