International
oi-Halley Karthik
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்குதான் சொந்தம். இப்படி இருக்கையில் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. தற்போது இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்க நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றியிருக்கிறது பாகிஸ்தான். இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்றும்.. இந்தியா இதை சும்மா விடாது எனவும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் ஆகியவற்றின் தற்போதைய நிலையை மாற்ற.. பாகிஸ்தான் அரசு பெரிய அரசியலமைப்பு மறுசீரமைப்பை திட்டமிட்டு வருகிறது.

குறிப்பாக கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்கு பாகிஸ்தானின் 5வது மாகாணம் என்கிற அந்தஸ்தை வழங்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படலாம். இந்த திட்டத்திற்கு பின்னால் சீனா இருப்பதுதான் பெரிய டிவிஸ்ட். இந்த பகுதியில் சீனா மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை’ திட்டம் இந்த பகுதியில் அமைய இருக்கிறது.
ஆனால், இந்த பகுதிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லை என்பதால், சீனா காசை வாரி இறைக்க பயப்படுகிறது. சீனாவுக்கு வேலை நடக்கனும், பாகிஸ்தானுக்கு காசு வேணும்.. எனவே, இந்த பகுதிக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதற்காகவே நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வர பாகிஸ்தான் ரெடியாகி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இப்படி செய்தால் இந்தியா சும்மா ஒன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. ஏனெனில், பாகிஸ்தான் உரிமை கோருவது இந்தியாவின் ஒரு பகுதியை.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அப்போதைய ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தின் மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைவதாக ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். இந்த ஒப்பந்தம் மூலம் முழு ஜம்மு-காஷ்மீர் மாநிலமும்.. அதாவது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதி, கில்கிட்-பல்டிஸ்தான் ஆகியவையும் நமக்குதான் சொந்தம். 1994ல் இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி எனறும், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளும் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்படியாக முழுக்க முழுக்க நமக்கு சொந்தமான நிலப்பகுதியை சீனாவுக்காக, பாகிஸ்தான் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள நினைப்பது சர்வதேச விதிமீறல் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒருவேளை இந்த விமர்சனங்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் பாகிஸ்தான் தொடர்ந்து இதை சட்டப்பூர்வமாக செய்ய முயற்சித்தால் இந்தியா தாக்குதலுக்கு கூட தயாராகும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மறுபுறம், இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையில் இப்போதுதான் எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் வந்து பாகிஸ்தான் குட்டையை குழப்புவது.. இந்தியா vs சீனா, பாகிஸ்தான் என்றுதான் பிரச்சனையை ஏற்படுத்தும்.


