தமிழகம் முழுவதும் மின் வெட்டு விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே தவெக அரசுக்கு மின் விநியோகம் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. சென்னையின் முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில் மின் தடை வழக்கமாகியிருக்கிறது. அதேமாதிரியே தமிழகத்தின் பல ஊர்களிலும் முன்னறிவிப்பற்ற மின் தடை மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. இதுதொடர்பாக மக்களின் கருத்தை அறிய தமிழகம் முழுவதும் நம்முடைய நிருபர்கள் களத்தில் இறங்கியிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம்:
கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் தொடர்வதாக குற்றம் சாட்டுகின்றனர் விழுப்புரம் மாவட்ட மக்கள். நகர்ப்புறம், கிராமப்புறம், இரவு, பகல் என்ற எந்தவித பாகுபாடுமின்றி மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
`மொத்த ஏரியாவே இருட்டாயிடுது..!’
“ஒரு வாரமா கரண்ட் எப்போ போகும், எப்போ வரும்னே தெரியல. கரண்ட் இல்லாம ஆபீசருங்க இருப்பாங்களா ? பகல்ல குறைஞ்சபட்சம் 3 தடவை கட் பண்ணிடறாங்க. அதேபோல நைட்ல அஞ்சாறு தடவை கட் பண்ணிடறாங்க. குழந்தை அழுதுக்கிட்டே இருக்குது. ஏரியாவே இருட்டாயிடுது. அதனால குழந்தைய தூக்கிட்டு வெளில கூட போக முடியல” என்கிறார் விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி.
`ஒரு நாளைக்கு பத்து தடவை கரண்ட் கட் ஆகுது…!’
இதுகுறித்து திண்டிவனம், நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமு, “எப்போ கரண்ட் கட் ஆகும்னோ தெரியல. அப்படி கட் ஆகுற கரண்ட் எப்போ வரும்னும் தெரியல. நிலத்துல நீர் மோட்டரை போட்ட அஞ்சு நிமிஷத்துல கரண்ட் போயிடுது. அதுக்கப்புறம் அப்புறம் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழிச்சுதான் வருது. அதுக்கப்புறமாவது இருக்கும்னு நினைச்சா, அதுவும் இல்ல. வந்த அரை மணி நேரத்துல உடனே கட் ஆயிடுது. இப்படி ஒரு நாளைக்கு10 தடவை கட் ஆயிடுது. அதனால் பத்து தடவை மோட்டரை ஆன் பண்ண வேண்டியதா இருக்குது. இப்படி இருந்தால் எங்க பயிறுக்கு எப்படி நாங்க தண்ணீர் பாய்ச்சுறது ? வெய்யில்ல வேலை பார்த்துட்டு வீட்டுக்குப் போனா அங்கயும் கரண்ட் இருக்க மாட்டுது. கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா தூங்க முடியல. புண்ணியமா போகட்டும். எங்களுக்கு ஃப்ரீ சிலிண்டரும் வேணாம் எதுவும் வேணாம். கரண்ட்டை கட் பண்ணாம இருந்தாலே போதும்” என்கிறார்.

எங்க வருமானமோ போயிடுச்சி…!’
அதேபோல மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த டைலர் ராதாவிடம் பேசியபோது, “ஒரு நாளைக்கு ஆறு துணி தைக்கிற இடத்துல, கரண்ட் கட் ஆகுறதால ரெண்டு துணிதான் தைக்க முடியுது. இதனால் எங்களோட வருமானமே போயிடுச்சி. அதேபோல நைட்ல குழந்தைகளை தூங்க வைக்கறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு. பசங்க அசைன்மென்ட் எழுத போன்ல சார்ஜ் கூட போட முடியல” என்று அவர் பேசும்போதே கரண்ட் கட் ஆனது. உடனே, “நீங்களே பாத்தீங்க இல்ல. கடந்த ஒரு மணி நேரத்துல மூணு தடவை கரண்ட் கட் ஆயிடுச்சி. குழந்தைகளுக்கு ஃப்ரிட்ஜ்ல வைக்கிற பால் கூட கெட்டுப்போயிருது” என்றார்.
அப்போது அங்கிருந்த மளிகை மற்றும் ஐஸ்க்ரீம் கடைக்காரர்கள், “கூலர்ல இருக்குற எல்லா ஐஸ்கிரீமும் கரைஞ்சு போயிடுது. அதேபோல காசு கொடுத்து வாங்குற பால், தயிர் எல்லாமே இந்த கரண்ட் பிரச்சனைனால சீக்கிரமாவே கெட்டுப் போயிடுது” என்கிறார்கள்.
கோவை :
கோவையில் மின் தடை ஏற்படவில்லை என்றாலும், சில இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது பெய்யும் கோடை மழை மற்றும் அதிக காற்று காரணமாக இந்த மின் வெட்டுகள் ஏற்படுகின்றன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இதை சரிசெய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இதேபோல பராமரிப்பு பணிகளுக்காக மின் வெட்டு செய்யப்படுகின்றன. இருப்பினும் இதுவரை பெரிய அளவிலான மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படவில்லை.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் மின்வெட்டு பெரிய அளவில் இல்லை. அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடங்கள் வரையே மின்வெட்டு ஏற்படுகிறது. ஆனால், கிராமப் பகுதிகளில் பகல் நேரங்களில் 2 முதல் 4 முறையும், நள்ளிரவு நேரங்களில் 5 முதல் 6 முறையும் 10 முதல் 15 நிமிடங்கள் முதல் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்திலும் விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி போன்ற நகர் பகுதிகளிலும் பெரிய அளவில் மின்வெட்டு இல்லை. கிராமப் பகுதிகளில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. பகல் நேரங்களில் அதிகபட்சம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு ஏற்படுவதால், தொழில் பாதிப்புகளும் பெரிய அளவில் இல்லை. இந்த மின் வெட்டு நேரம் அதிகரித்துவிடக்கூடாது என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம்!
ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சித்தோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரவு 9 முதல் நள்ளிரவு 1 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுதவிர 5 நிமிடங்கள் 10 நிமிடங்கள் என அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு சீரமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. வாட்டும் கோடை வெப்பத்தில் தகிக்கும் மக்கள் மின்வெட்டால் சிரமப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் விசைத்தறி தொழில் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டத்தின் கோல்டன் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை நண்பகலில் 20 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. நேற்று மாலை 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. தொழில் நகரமான திருப்பூரில் மின்வெட்டு நடவடிக்கையில் ஈடுபட்டால் விவகாரம் பெரிதாகும் என்பதால் தயக்கம் காட்டுவதாக மக்கள் கூறிவரும் அதேவேளையில், வரும் நாள்களில் மின்வெட்டு இருக்குமோ என்கிற கவலையில் உள்ளனர்.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சிட்டி லிமிட், ரூரல் என்கிற பாரபட்சம் இல்லாமல் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அம்மாபேட்டை, பொன்னம்மா, கொண்டலம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரம் காலம் ஏதுமின்றி ஒருமணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாத இந்த திடீர் மின்வெட்டால் செய்வதறியாது மக்கள் திணறி வருகின்றனர்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை மின்வெட்டு எதுவும் கிடையாது.
தேனி, மதுரை மாவட்டங்களில் மின்தடை புகார் இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில், தினமும் இரவு நேரங்களில் மூன்று முறை மின்சார தடை ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். ஒவ்வொரு முறையும் மின்சார தடை ஏற்பட்டால் 15 நிமிடங்கள் கழித்து தான் மின்சாரம் வருவதாக கூறுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாபட்டத்தில் மின் தடை பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக, சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமான ராமேஸ்வரம் பகுதியில், பகுதி பகுதியாக மின் தடை ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி சுற்றுலா பயணிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மின் தடையின் போது தங்கும் விடுதிகளில் குளிர்சாதன வசதி நிறுத்தப்படுவதால், பணம் செலுத்தியும் குளிர்சாதன வசதி பெறமுடியாத நிலை உள்ளது.
மண்டபம் அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில், கடந்த 5 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இங்கு 550 குடும்பங்களை சேர்ந்த 1550 தமிழர்கள் தங்கியுள்ளனர். முகாமிற்கென தனித் துணை ஆட்சியர் அளவில் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், முகாமில் ஏற்பட்டுள்ள மின் தடையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் முகாமிற்கு முன் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு நாள் 4 முறை வரை மின் வெட்டு ஏற்படுகிறது. குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால், மின் தேவை குறைவாக உள்ள நிலையிலும் மின் வெட்டு ஏற்பட காரணம் என்னவென்று அதிகாரிகள் தெரிவிப்பதில்லை.

சில நேரங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பியில் விழுந்ததால் மின் தடை ஏற்படுவதாக சில நேரங்களில் அதிகாரிகள் காரணம் சொல்கிறார்கள். அஇக்கடை மின் தடை ஏற்படுவதும், 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரத்தில் மீண்டும் மின்சாரம் வருவதும் தொடர்கதையாக உள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு நிலவுகிறது. அங்குள்ள சேனூர் போன்ற கிராமப் பகுதிகளில் நாளொன்றுக்கு 10 முறைகூட மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், காட்பாடியில் சித்தூர் பேருந்து நிலையம் அருகிலிருந்த டிரான்ஸ்ஃபார்மர் சமீபத்தில் வெடித்து தீப்பற்றி எரிந்துபோனது. அதேபோல, வேலூர் ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சத்துவாச்சாரி பகுதி யிலும் சீரான மின்விநியோகம் இல்லை.
விருப்பாட்சிபுரம் பகுதியில் கடந்த 3 நாள்களாகவே இரவு நேரங்களில் மட்டும் குறைவான மின்னழுத்தம் ஏற்படுவதால் ஏ.சி, ஃபிரிட்ஜ், டி.வி போன்ற மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை உருவாகியிருப்பதால், அங்குள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை துணை மின் நிலையம் பகுதியில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நாஞ்சிக்கோட்டை வெற்றி விநாயகர் நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கிராமப்பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டால், மீண்டும் வருவதற்கு மணி கணக்கில் நேரம் ஆகிறது. நாஞ்சிக்கோட்டை பகுதியில் பெரும்பாலும் லோவோல்டேஜ் மின்சாரம்தான் வருகிறது. இதனால் அடிப்படை தேவைகளான மிக்ஸி, கிரைண்டர் கூட வேலை செய்யாத நிலை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆட்சியில் இருந்தே இது தொடர்வதாகவும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அவ்வப்போது 15 நிமிடங்கள் வரை மின் தடை ஏற்படுகிறது.

வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் இரவு நேரத்தில் இரண்டு முறை ஒரு மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது. அதேபோல், அந்த ஒன்றியத்தில் உள்ள புதூர், கரியமாணிக்கம், சிறுகனுர், எதுமலை உள்ளிட்ட கிராமங்களிலும் தினமும் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. சமயபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 1 முதல் 2 மணி வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. முசிறி பகுதிகளிலும் தினமும் அரை மணி நேரம் வரை பரவலாக மின்வெட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
நம்முடைய நிருபர்கள் களத்தில் இறங்கி விசாரித்த வரைக்கும் சில மாவட்டங்களில் மின் தடை மக்களுக்கு பெரியளவில் இருப்பதை அறிய முடிகிறது. சில மாவட்டங்களில் மின் தடை ஏற்படாத அளவுக்கு அதிகாரிகள் திறம்பட சமாளிப்பதையும் அறிய முடிகிறது. வழக்கமாக, தமிழ்நாட்டின் மின் தேவை ஒரு நாளுக்கு சராசரியாக 16000 மெகாவாட் என்றளவில் இருக்கும். அதேநேரத்தில் கோடை காலங்களில் மக்களின் மின் தேவை அதிகரிக்கும்.
அதிகப்படியான பயன்பாட்டால் ஒரு நாளைக்கு 22000 மெகாவாட் வரைக்குமே கூட தேவை ஏற்படுகிறது. வழக்கத்தை விட அதிகமாக தேவைப்படும் மின் அளவுதான் மின் தடைக்கு காரணம் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ‘தேவைக்கு ஏற்ற அளவு மின்சாரம் நம்மிடம் இருக்கிறது. திடீரென சில இடங்களில் லோடு அதிகமாகும் போதுதான் மின் தடை ஏற்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் அதை சரி செய்வதில் தாமதம் நிலவலாம். 1,40,000 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 70000 பேர் வரை மட்டுமே வேலை செய்கின்றனர். ஆனால், பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம்.
அதிகாரிகள் தூக்கமின்றி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் தனிப்பட்ட நபர்களின் தவறுகளாலும் மின் தடைகள் நடந்திருக்கிறது. சிலரின் தூண்டுதலின் பேரில் மின் தடை செய்த அந்த கருப்பு ஆடுகளை கண்டறிந்திருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.
மின் தடையை ஒரு பிரச்னையே இல்லை என்பதை போல ஒதுக்கிவிட முடியாது. சில இடங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராடியிருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆக, அரசு தரப்பு சொல்வதை போல சில இடங்களில் மட்டுமே பிரச்னை இருந்தாலும் அவையும் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.