சென்னை: பெண்கள் பாத்ரூமில் கேமரா – மேனேஜர் சிக்கியது எப்படி?!

Spread the love

சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், வானகரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 25.11.2026-ம் தேதி அந்தப் பெண்ணும் அவருடன் வேலைப்பார்க்கும் இன்னொரும் பெண்ணும் பாத்ரூமிற்குச் சென்றனர். அப்போது, அங்குள்ள வாஷ்பேசின் அடியில் சிறிய அளவிலான கேமரா பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்து இரண்டு பெண்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்தத் தகவலை தங்களின் உயரதிகாரிகளிடமும் அங்கு வேலைப்பார்க்கும் சக பெண்களிடமும் தெரிவித்தனர். அதோடு பாத்ரூமில் கேமரா வைத்த சம்பவம் தொடர்பாக வானகரம் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸ் டீம், அந்த கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பெண்கள் பாத்ரூம் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதைத் தொடர்ந்து கேமராவை பாத்ரூமில் பொருத்தியது யார் என விசாரணை நடத்திய போலீஸார், நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மேனேஜராக வேலை செய்யும் வன்னியராஜ் என்பவர் சில தினங்களாக இரவு நேரத்தில் மேற்படி பெண்கள் பாத்ரூமிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்தான் பெண்கள் பாத்ரூமில் ரகசிய கேமராவை வைத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஆவடியைச் சேர்ந்த வன்னியராஜை (38) போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து சிறிய பட்டன் ஸ்பை கேமரா, ஐபோன் உட்பட 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *