கூட்டணி பஞ்சாயத்து.!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார் செல்வபெருந்தகை.
இந்த பதவிக்கு இவர் வந்து சுமார் இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைப்பது என்கிற பஞ்சாயத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டவர்கள் த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர்.
மற்றொருபுறம், மாநில தலைவர் செல்வபெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதே நமக்கு பாதுகாப்பு என டெல்லி மேலிடத்திடம் வலியுறுத்திவந்தனர். ராகுல் காந்தி தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என முதலில் கூறப்பட்டது. பிறகு செல்வபெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவுடன் பேசி, தி.மு.க கூட்டணியை இறுதி செய்தார். இதனை தொடர்ந்தே தொகுதி பங்கீடு முடிந்தது.

ஆர்வம் காட்டாத ராகுல்…
காங்கிரஸ் -தி.மு.க இடையே கூட்டணி மலர்ந்தாலும் களத்தில் அது பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை. பல இடங்களில் தி.மு.க-வினர் காங்கிரஸ் கட்சியினருக்கு போதிய அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்கிற முணுமுணுப்பு காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது.
மற்றொருபுறம், தி.மு.க.தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுடன், ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் செய்தால் தேர்தல் களத்தில் நன்றாக எடுபடும் என இரண்டு கட்சியின் நிர்வாகிகளும் விரும்பினார்கள். ஆனால், ராகுல் காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வரவே ஆர்வம் காட்டாமல் இருந்தார். அதோடு, செல்வபெருந்தகையுடன் தேர்தல் பிரசாரம் செய்ய அவர் விரும்பவில்லை என்கிற தகவலும் காங்கிரஸ் கட்சிக்குள் உலவியது.