செவ்வாய் ராகுகால வழிபாடு! துர்கா ஸ்லோகம் சொன்னால்..! – Kumudam

Spread the love

துக்கத்தையும் தோல்வியையும் போக்கி அருளுபவள் என்பதால் துர்காதேவி எனும் திருநாமம் கொண்டாள் தேவி. பராசக்தி எடுத்த எண்ணற்ற அவதாரங்களில் துர்கையும் ஒருத்தி. ஸ்ரீதுர்கையின் ஸ்லோகத்தைச் சொன்னால் சுபிட்சம் நிச்சயம் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் தந்தருளுவாள் துர்கையின் பெருமையை சாக்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள்.

எல்ல சிவாலயங்களிலும் பிள்ளையாருக்கு தனிச்சந்நிதி உண்டு. அதேதருணத்தில், கோஷ்டத்தில் நர்த்தன விநாயகரைத் தரிசிக்கலாம். அதேபோல், தெற்குப்பார்த்தபடி தட்சிணாமூர்த்தி தரிசனம் தருவார். அதேபோல், கோஷ்டத்தில், கருவறைக்குப் பின்பகுதியில் லிங்கோத்பவர் அல்லது பிரம்மாவைக் காணலாம். அதையடுத்து சண்டிகேஸ்வரரும் துர்கையும் சந்நிதியாகவோ கோஷ்டச் சுவரிலோ வீற்றிருப்பார்கள்.

சக்தி என்று பெண் தெய்வங்களைச் சொல்கிறோம். அவர்களில் மிக வல்லமை பொருந்தியவளாக, தீய எண்ணம் கொண்ட, அரக்க சிந்தனைக் கொண்டவர்களை அழிப்பவளாகத் திகழ்கிறாள் துர்கை. செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் துர்காஷ்டகம் சொல்லி வழிபட்டு வந்தால், நமக்குள் இருக்கிற எதிர்மறை எண்ணங்களை, அழித்துக் காப்பாள். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவாள் துர்கை என்று பெண்கள் வியந்து சொல்கிறார்கள். .

துர்கை வலிமையின் ஆதாரம். துஷ்ட சக்திகளை அழிக்க அவதாரம் எடுத்தவர்களில் ஒருத்தி.  அசுரர்களையும் நம் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்பு மற்றும் தடைகளையும் துவம்சம் செய்பவள்.  துர்காதேவியைச் சரணடைந்தால், நம் ஏழு ஜென்மப் பாவங்கள் அகலும் என்பது ஐதீகம்!

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்குவால் தேவி.

துர்கையின் ஸ்லோகம் இதுதான்..!

ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
ரட்சிணி ஸ்வாஹ;

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லலாம். காலையும் மாலையும் சொல்லி வீட்டில் இருந்தபடியே வணங்கலாம். அருகில் உள்ள ஆலயத்துக்கு ராகுகால வேளையில் சென்று வழிபடலாம். கடன் முதலான பிரச்சினையில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் நம்மைக் கைத்தூக்கிவிடுவாள்; கரையேற்றித் தருவாள் துர்காதேவி.

செவ்வாயும் வெள்ளிக்கிழமையும் அம்மன் வழிபாட்டுக்கு உகந்தநாட்கள். செவ்வாய்க்கிழமையில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களும் பக்தர்களும் ஏராளம்.வெள்ளிக்கிழமையன்றும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு பூக்கள் சார்த்தி வேண்டுவது வழக்கம். பெண் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாட்கள் இவை என்று தர்மசாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை. பொதுவாகவே இந்த சமயத்தில் கோயில் நடை திறந்திருக்கும். ஆகவே இந்த சமயத்தில் துர்கையின் சந்நிதியில் எலுமிச்சையால் தீபமேற்றி வழிபடுவது வழக்கம். இதேபோல, செவ்வாய்க்கிழமையில் ராகுகாலம் என்பது மாலை 3 முதல் 4.30 வரை. மதியம், உச்சிகால பூஜைக்குப் பிறகு கோயில் நடை சார்த்தப்பட்டாலும் செவ்வாய்க்கிழமைகளில், பக்தர்கள் துர்கையின் சந்நிதியில் விளக்கேற்றுவதற்காகவே அப்போது நடை திறந்திருக்கும்.

ராகுகாலத்தில் நாம் எந்தவொரு காரியத்தையும் செய்யமாட்டோம். ஆனால் ராகுகாலத்திலும் வழிபாடு செய்யலாம். அதுவும் துர்கையின் சந்நிதியில் நின்று அவளிடம் நம் வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்களை முறையிடலாம். அவற்றை செவிமடுத்துக் கேட்டு, ஒரு தாயைப் போல் வந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருளுவாள் துர்கை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *