`செஸ்போர்டின் 64 கட்டங்களுக்காக 63 கொலைகள்' ரஷ்யாவை நடுங்கவைத்த சீரியல் கில்லர்! குருதிச் சுவடுகள் 4

Spread the love

சதுரங்கம் என்பது அறிவுக்கூர்மைக்கான விளையாட்டு. ஆனால், மாஸ்கோவின் தென்பகுதியில் அமைந்திருந்த ஒரு தனிமையான பூங்காவில், சதுரங்கப் பலகையின் 64 கட்டங்களும் மனித உயிர்களின் கணக்காக மாற்றப்பட்டன. ஒவ்வொரு மனிதனைக் கொல்லும்போதும், தனது சதுரங்கப் பலகையின் ஒரு கட்டத்தில் ஒரு நாணயத்தை வைத்து நிரப்பி வந்தான் ஒருவன். அவனது இலக்கு 64 கொலைகள்.

அந்தக் கொடூரனின் பெயர்தான் அலெக்சாண்டர் பிசுஷ்கின் (Alexander Pichushkin). உலகம் அவனை செஸ்போர்டு கில்லர் என்றும் பிட்சா பூங்கா வெறியன் (Bitsa Park Maniac) என்றும் அழைத்தது.

சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்
சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்

காயம்பட்ட பால்யமும் குரூரத்தின் தொடக்கமும்

1974-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி, ரஷ்யாவின் மைட்டிஷ்சி நகரில் பிறந்தவன் அலெக்சாண்டர் பிசுஷ்கின். இவன் பிறந்த ஒன்பது மாதங்களிலேயே இவனது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அலெக்சாண்டர், சிறுவயதில் மிகவும் அமைதியான, புத்திசாலித்தனமான பையனாகவே இருந்தான்.

ஆனால், அவனது வாழ்க்கையின் திசையை மாற்றிய ஒரு விபத்து சிறுவயதில் நடந்தது. பூங்காவில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்து தவறி விழுந்ததில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூளையின் முன்மடல் பகுதியில் ஏற்பட்ட இந்தக் காயம், அவனது குணாதிசயங்களில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியதாக மனநல மருத்துவர்கள் பின்னாளில் குறிப்பிட்டனர்.

பள்ளியில் சக மாணவர்களால் கேலி செய்யப்பட்ட அவன், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிக்கு மாற்றப்பட்டான். தனிமையில் வாடிய அவனுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது அவனது தாத்தாதான். தாத்தாதான் அலெக்சாண்டருக்குச் சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அந்தத் தாத்தாவும் திடீரென உயிரிழக்க, அலெக்சாண்டர் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு, மதுவுக்கு அடிமையானான்.

பிசுஷ்கின் தனது 18-வது வயதில், 1992-ம் ஆண்டு தனது முதல் கொலையைச் செய்தான். தன்னுடன் படித்த மிகைல் ஓடிச்சுக் என்ற நண்பனை, “நாம் சேர்ந்து சிலரைக் கொலை செய்யலாம்” என்று அழைத்தான். ஆனால் நண்பன் மறுக்கவே, ஆத்திரமடைந்த பிசுஷ்கின் அவனது கழுத்தை நெரித்துக் கொன்று, உடலைக் கழிவுநீர் கால்வாயில் வீசினான்.

அப்போது காவல்துறை அவனைச் சந்தேகித்து விசாரித்தாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்தது. இதுவே அவனுக்கு மிகப்பெரிய துணிச்சலைக் கொடுத்தது. அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு அவன் அமைதியாக இருந்தான்; ஆனால் அவனுக்குள் இருந்த கொலை வெறி உள்ளுக்குள்ளேயே வளர்ந்து கொண்டிருந்தது.

சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்
சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்

வேட்டைக்களமான பூங்கா

2001-ம் ஆண்டு முதல் பிசுஷ்கின் தனது கொலை வேட்டையைத் தீவிரப்படுத்தினான். மாஸ்கோவின் மிகப்பெரிய வனப்பூங்காக்களில் ஒன்றான பிட்சா பூங்கா தான் அவனது வேட்டைக்களமாக மாறியது. வீடற்றவர்கள், முதியவர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களையே பெரும்பாலும் அவன் குறிவைத்தான். காரணம், இவர்கள் காணாமல் போனால் யாரும் பெரிய அளவில் தேட மாட்டார்கள் என்பது அவனது கணக்கு.

பூங்காவிற்கு வரும் முதியவர்களிடம் அன்பாகப் பேசி, “இறந்துபோன என் நாய்க்காக ஒரு கிளாஸ் வோட்கா குடிக்க வாருங்கள்” என்று அழைப்பான். போதை தலைக்கேறியதும், பின்னால் இருந்து சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்துக் கொல்வான். சில சமயங்களில் உடைந்த மது பாட்டிலை அவர்களின் மண்டைக்குள் சொருகி வைப்பான். அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழக் கூடாது என்பதற்காக!

ஒவ்வொரு கொலைக்குப் பிறகும், வீட்டிற்குச் சென்று தனது சதுரங்கப் பலகையின் ஒரு கட்டத்தில் ஒரு நாணயத்தை வைத்து மூடுவான். 64 கட்டங்களையும் நிரப்ப வேண்டும் என்பதே அவனது வெறியாக இருந்தது.

ஆரம்பத்தில் கொலைகளை ரகசியமாகச் செய்த பிசுஷ்கின், நாளடைவில் காவல்துறைக்குச் சவால் விடும் விதமாக உடல்களைப் பூங்காவில் வெளிப்படையாகப் போடத் தொடங்கினான். 2006-ம் ஆண்டு ஜூன் மாதம், மரினா மொஸ்கலியோவா என்ற 36 வயதுப் பெண் பிசுஷ்கினுடன் பூங்காவிற்குச் சென்றார். புத்திசாலித்தனமாக, அந்தப் பெண் வீட்டை விட்டுப் புறப்படும் முன், தனது மகனிடம் பிசுஷ்கினின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

அடுத்த நாள் மரினாவின் சடலம் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது. அந்த ஒரு துண்டுக் காகிதம், பல ஆண்டுகளாக மாஸ்கோ காவல்துறையைத் திணறடித்துக் கொண்டிருந்த செஸ்போர்டு கில்லரை அடையாளம் காட்டியது. 2006 ஜூன் 16 அன்று பிசுஷ்கின் கைது செய்யப்பட்டான்.

சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்
சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்

வாக்குமூலமும் தண்டனையும்

காவல்துறை விசாரணையிலும், 2007-ம் ஆண்டு நடந்த நீதிமன்ற விசாரணையிலும் பிசுஷ்கின் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இன்றிப் பேசினான். “என்னைப் பொறுத்தவரை கொலை இல்லாத வாழ்க்கை, உங்களுக்கு உணவு இல்லாத வாழ்க்கையைப் போன்றது. நான் கடவுளைப் போல உணர்ந்தேன்; ஒரு மனிதன் வாழ வேண்டுமா, சாக வேண்டுமா என்பதை நானே தீர்மானித்தேன்.” நீதிமன்றத்தில் பிசுஷ்கின் அளித்த வாக்குமூலம் இது.

அவன் மொத்தம் 63 பேரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டான். “இன்னும் ஒரு கொலை செய்திருந்தால் என் சதுரங்கப் பலகை முழுமையடைந்திருக்கும்; காவல்துறை என்னைச் சீக்கிரமே பிடித்துவிட்டது” என்று வருத்தப்பட்டான்! (ஆனால், போதிய ஆதாரங்களின் அடிப்படையில் 48 கொலைகள் மற்றும் 3 கொலை முயற்சிகளுக்கு மட்டுமே நீதிமன்றம் அவனைக் குற்றவாளியாக அறிவித்தது).

சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்
சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிசுஷ்கின்

2007 அக்டோபர் 29 அன்று, ரஷ்ய நீதிமன்றம் அவனுக்கு ஆயுள் தண்டனை (முதல் 15 ஆண்டுகள் தனிமைச் சிறை) விதித்துத் தீர்ப்பளித்தது. தற்போது அவன் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள மிகவும் கடுமையான Polar Owl சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அலெக்சாண்டர் பிசுஷ்கினின் கதை, மனித மனதின் இருண்ட பக்கங்களுக்கு ஒரு சாட்சியாக இன்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. பால்ய வயதில் ஏற்பட்ட மூளைக் காயம், தனிமை, கவனிக்கப்படாத மனநலப் பிறழ்வு ஆகியவை எவ்வாறு ஒரு சாதாரண இளைஞனை இரக்கமற்ற அரக்கனாக மாற்றும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு கசப்பான பாடம்.

சதுரங்கப் பலகையின் 64 கட்டங்களை நிரப்ப அவன் ஆடிய மரண விளையாட்டு, 2006-ல் முடிவுக்கு வந்தாலும், பிட்சா பூங்காவின் மரங்கள் இன்றும் அந்தக் கொடூர இரவுகளின் சாட்சியாகவே நின்று கொண்டிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *