2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், சுமார் 62,989 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
அப்போது 93 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை, நடைபெறும் தேர்தலிலும் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் ராஜாராம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆயிஷா பேகம், தவெக சார்பில் சார்பில் டி.செல்வம் ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியைப் பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்தே தி.மு.க-வின் ஸ்ட்ராங்ஹோல்டு என்றாலும், இந்த முறை எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் ‘வாரிசு அரசியல்’ என்ற முழக்கங்களுக்கு இடையே உதயநிதி களமிறங்கினார். ஆனால், தொகுதி மக்களிடம் அவர் கொண்டிருந்த நெருக்கம், குறிப்பாகக் கடந்த காலங்களில் அங்கு மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சில சுற்றுகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் டி.செல்வம் உதயநிதிக்கு கடும் சவாலை அளித்தார். ஒரு கட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்ததாக வந்த செய்திகள் தி.மு.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. த.வெ.க-வின் ‘புதிய அரசியல்’ மற்றும் ‘மாற்றம்’ குறித்த முழக்கம், இந்தத் தொகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களைப் பெருமளவு கவர்ந்ததே இந்த இழுபறிக்குக் காரணமாக அமைந்தது.
சேப்பாக்கம் எப்போதும் திமுக-வின் எஃகு கோட்டையாக இருந்துள்ளது. கருணாநிதி, அன்பழகன் என ஜாம்பவான்கள் வென்ற தொகுதி என்பதால், அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பு உதயநிதிக்குக் கைகொடுத்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அடித்தட்டு மக்களிடையே உதயநிதிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. திருவல்லிக்கேணியின் அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது, உதயநிதி ஸ்டாலின் சீரான முன்னிலையைப் பெறத் தொடங்கினார். சிறுபான்மையின மக்களின் வாக்குகள் திமுக-விற்குப் பெருமளவு சாதகமாக அமைந்தன.
முதல் தேர்தலிலேயே துணை முதலமைச்சரை எதிர்த்து களம் கண்டு, ஆரம்பக் கட்டத்தில் முன்னிலை பெற்றது த.வெ.க-வின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. த.வெ.க தலைவர் விஜய்யின் பிம்பம் மற்றும் அக்கட்சியின் களப்பணி உதயநிதிக்குச் செல்ல வேண்டிய வாக்குகளைக் கணிசமாகப் பிரித்தது. பழைய அரசியல் முறையைத் தாண்டி புதிய மாற்றத்தை விரும்பிய இளைஞர்கள் த.வெ.க-விற்குத் துணையாக நின்றனர்.
“வெற்றி என்பது வெறும் எண்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.” உதயநிதி ஸ்டாலின் 62,989 வாக்குகள் பெற்று வென்றிருந்தாலும், த.வெ.க கொடுத்த நெருக்கடி தி.முக.-விற்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.