சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த முடியாத நிலையில், குழந்தைகளைப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தம்பதிக்கு கடந்த 19 – ம் தேதி அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வறுமை காரணமாக இந்தப பெண் குழந்தையை வளர்க்க முடியாது எனக் கருதிய பெற்றோர் , குழந்தையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு வெளியில் தெரியாமல் விற்பனை செய்திருக்கிறார்கள்.

சட்டவிரோதமாக நடந்த இந்தக் குழந்தை விற்பனை குறித்து கொண்டலாம்பட்டி காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிறந்து ஏழு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கிச் சென்ற ராமநாதபுரம் தம்பதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து சேலத்திற்கு காரில் குழந்தையை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். வறுமை காரணமாக குழந்தையை விற்றனரா அல்லது குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்யும் புரோக்கர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.