கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் மும்பை ஒர்லி பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அமைச்சர் கிரீஷ் மகாஜன் தலைமையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொண்டர்கள் வந்து சேர தாமதம் ஆனதால் பேரணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பேரணிக்காக வந்த அமைச்சர் கிரீஷ் மகாஜன் மற்றும் தொண்டர்கள் நடுரோட்டில் நின்றனர். அது முக்கியமான சந்திப்பு என்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்தப் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட தீனா செளதரி என்ற பெண் தனது காரில் இருந்து இறங்கி நேரடியாக அமைச்சரிடம் சென்று இந்த இடத்தைக் காலி செய்யுங்கள் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.
அவர் அமைச்சருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ரீனா நடந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் தனது வீடியோவில், “‘சம்பவத்தன்று நான் எனது மகளை மியூசிக் கிளாசில் இருந்து மாலை 4.45 மணிக்கு பிக்கப் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தேன். ஆனால் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.
காருக்குள் 25 நிமிடம் இருந்தேன். அதன் பிறகுதான் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள காரைவிட்டு இறங்கினேன். பா.ஜ.கவினரின் போராட்டம் காரணமாக என்னை போன்று ஏராளமானோர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருந்தனர்.
ரோட்டில் இரண்டு பஸ்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்ததால் மற்ற வாகனங்களால் செல்ல முடியவில்லை. ஒன்றரை மணி நேரமாக ஒவ்வொரு போலீஸ் அதிகாரியிடமும் சென்று ரோட்டில் நிறுத்தி இருக்கும் பஸ்களை அங்கிருந்து அகற்றும்படி கேட்டுக்கொண்டேன். அப்படி எடுத்தால் மற்ற வாகனங்கள் யூ டர்ன் எடுத்து செல்ல முடியும் என்று கூறினேன்.
ஆனால் எந்த அதிகாரியும் அதனைக் கேட்கவில்லை. சேவை (serve) என்ற சொல்லைச் சிறப்பாக வலியுறுத்த விரும்புகிறேன்; ஏனெனில், நீங்கள்(போலீஸார்) சீருடை அணியும்போது, பொதுச் சேவையில் ஈடுபடுகிறீர்கள்.