‘ஜெகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி.
தற்போது இவர் தமிழில், விஷ்ணு விஷாலுடன் ‘கட்டா குஸ்தி 2’, அர்ஜுன் தாஸுடன் ‘லவ்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்திருக்கிறார்.

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், மக்கள் எதிர்பார்ப்புடன் முடிவுகளை நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி, தவெக தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என ஆசை இருப்பதாகப் பேசியிருக்கிறார்.
அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, “எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். நான் கேரளாவைச் சேர்ந்தவள். எனக்கு இங்கு ஓட்டு கிடையாது. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
இந்த ஒரு முறை தமிழ்நாட்டில் வாக்களித்திருக்கலாம் என்று தோன்றியது. அவருக்கு எங்களுடைய வாழ்த்துகளும் , பிரார்த்தனைகளும் இருக்கின்றன.
அவருக்கு அரசியலுக்கு வர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவர் மிகவும் கம்போர்ட்டாக, மக்களின் அன்பு மற்றும் ஆதரவோடு இருக்கிறார்.

அவருக்கு மக்கள் மீது ஓர் அன்பு இருக்கிறது. அதனால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
அவருக்கு இவ்வளவு கொடுத்த மக்களுக்கு, திருப்பி நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அதைப் பாராட்ட வேண்டும்” என்றவரிடம்,
“விஜய் வெல்வார் என நினைக்கிறீர்களா?” எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் வர வேண்டும் என்று ரொம்ப ஆசை இருக்கிறது. என்னுடைய பிரார்த்தனைகளும் அவருக்கு உண்டு” எனப் பேசியிருக்கிறார்.