India
oi-Halley Karthik
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். இதில், 3 வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்.
பைக்கில் வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

சம்பவம் நடந்தது எப்படி?
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள மிர் பஜார் அருகே அக்ரன் பகுதியில் அமைந்துள்ள CRPF சோதனை சாவடியில், இன்று மதியம் 2.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
பைக்கில் ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள், சோதனை சாவடியில் நின்றிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். அவர்கள் ஆட்டோமேட்டிக் துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கிறார்கள். தாக்குதல் நடத்திவிட்டு.. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். நிலைமை உணர்ந்து, அலர்ட் ஆனா CRPF வீரர்கள் பதில் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவத்தில் மொத்தம் 3 வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர். இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
தாக்குதல் நடந்தவுடன் விரைவு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியிருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம் மற்றும் CRPF ஆகியவை இணைந்து அக்ரன் மற்றும் மிர் பஜார் சுற்றுவட்டார பகுதிகளை முழுமையாக சீல் செய்திருக்கின்றனர். அந்த பகுதியிலிருந்து யாரும் வெளியே போகாதவாறு சுற்றி வளைத்து.. தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.