
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர், முறையே மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றனர். இதற்கிடையே, பெருந்துறை, கரூர், திருச்சி கிழக்கு, விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் வென்ற தொகுதியில் யார் போட்டி?
சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், பின்னர் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகத் தொடர முடிவு செய்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்கு தவெக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் தவெக தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் கோவையில் நடிகை திரிஷா நடத்திய ரோடு ஷோவும், விஜய்யுடன் அவர் பொதுவெளியில் இணைந்து தோன்றுவதும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திரிஷாவைக் களமிறக்குவது குறித்தும் தவெக வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேவாலயங்களில் திரிஷாவுக்காக வாக்கு சேகரிப்பா?
திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள தேவாலயங்களை மையமாக வைத்து, திரிஷாவுக்கு ஆதரவாக ரகசியமாக வாக்கு சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் சில அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவின் முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரின் அரசியல் செல்வாக்கு இருப்பதால், இந்தத் தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திரிஷா போட்டியிட்டால், அது தமிழ்நாடு அரசியலில் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
திரிஷாவுக்கு எம்எல்ஏ பதவியா? எம்.பி. பதவியா?
இதற்கிடையே, திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷாவைக் களமிறக்குவதற்குப் பதிலாக, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது குறித்தும் அவரது ஆலோசகர்கள் தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், விஜய் வெற்றி பெற்ற தொகுதியில் தவெகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கருத்தும் கட்சிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், கட்சியின் ஆரம்பகால நிர்வாகிகள் அல்லது நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்வது குறித்தும் தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் தொடர்பாக விஜய் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிஷாவா, ஜான் ஆரோக்கியசாமியா அல்லது தவெகவின் வேறு முக்கிய நிர்வாகியா என்ற கேள்விக்கு இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே விடை கிடைக்கும்.