India
oi-Vigneshkumar
சண்டிகர்: ஜாம்பி போதை பொருளை எடுத்து கொண்ட இளைஞர்கள் சிலர் நடக்கக்கூட முடியாமல் திணறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக எம்பியும் பிரபல கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மியை சாடியிருந்தார். இருப்பினும், அந்த வீடியோ பாஜக ஆளும் ராஜஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது.
இப்போது போதை பொருள் என்பது தான் நாட்டில் முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. நாட்டின் சில மாநிலங்களில் போதை பொருள் விவகாரம் கையை மீறி போகும் அளவுக்கு மோசமாகி இருக்கிறது. இதற்கிடையே ஜாம்பி போதை பொருள் தொடர்பாக இப்போது புதிய அரசியல் விவாதம் எழுந்துள்ளது.

ஹர்ஜபன் சிங்
ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் ஜாம்பி போதை பொருள் என பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவியது. பஞ்சாபைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்பஜன் சிங், இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, பஞ்சாபின் நிலை குறித்து கவலை தெரிவித்தார். பஞ்சாப் இளைஞர்கள் இதைவிட சிறந்த எதிர்காலத்துக்கு தகுதியானவர்கள் என்றும் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஹர்பஜன் சிங் முதலில் ஆம் ஆத்மியில் இருந்து எம்பியானவர். அரவிந்த் கெஜ்ரிவால் தான் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பி இருந்தார். ஆனால், சமீபத்தில் ஆம் ஆத்மி எம்பிக்கள் பலரும் கட்சி மாறி பாஜகவில் ஐக்கியமாகி இருந்தனர். அதில் தான் ஹர்பஜன் சிங்கும் ஐக்கியமானார். இந்தச் சூழலில் தான் கட்சி மாறிய உடனேயே அவர் இந்த ஜாம்பி போதை பொருளை வைத்து ஆம் ஆத்மியை சாடினார்.
ஆம் ஆத்மி பதிலடி
ஹர்பஜன் சிங் வீடியோவை பகிர்ந்த சிறிது நேரத்திலேயே பஞ்சாப் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் பல்ஜித் கவுர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த வீடியோ பஞ்சாபில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் நடந்த சம்பவத்தை பஞ்சாப் சம்பவம் போல் ஹர்பஜன் சிங் சித்தரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக அரசியல் தலைமையை திருப்திப்படுத்துவதற்காக ஹர்பஜன் சிங் பஞ்சாபின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாகவும் சாடினார்.
Another case of “Zombie” drug. Video is from Sri ganganagar. pic.twitter.com/A39eRtGdbQ
— DesiEsco🇮🇳 (@DesiEsco7) August 9, 2026
ஜாம்பி போதை பொருள்
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய அந்த வீடியோவில் தலைப்பாகை அணிந்த இரண்டு ஆண்கள் சாலையோரத்தில் மிகவும் தடுமாறிய நிலையில் காணப்படுகின்றனர். அவர்கள் போதையில் இருப்பது போன்றும், சரியாக நிற்க கூட முடியாமல் திணறுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் பலரும் ஜாம்பி போதை பொருளை எடுத்தாலேயே அவர்கள் இதுபோல தடுமாறுவதாக பதிவிட்டிருந்தனர்.
சிலர் இந்தச் சம்பவம் பஞ்சாப்பில் நடந்ததாக குறிப்பிட்டனர். இன்னும் சிலர் இந்த சம்பவம் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் நடந்ததாக குறிப்பிட்டனர். இருப்பினும், எது அங்கு வீடியோவாக எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. மேலும், அவர்கள் உண்மையாகவே ஜாம்பி போதை பொருளை தான் எடுத்திருந்தனரா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
அரசியல் மோதல்
ஆனால், இந்த வீடியோவை வைத்து அங்கு மிக பெரிய அரசியல் மோதலே நடக்கிறது. ஒரு பக்கம் இந்த வீடியோவை வைத்து ஆம் ஆத்மியை பாஜக சாடுகிறது. பஞ்சாபில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினையை ஆம் ஆத்மி அரசு முறையாக கையாளவில்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்கிறது பாஜக! மறுபுறம், ராஜஸ்தான் சம்பவத்தின் வீடியோவை பஞ்சாபுடன் தொடர்புபடுத்தி, மாநிலத்தின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துவதாக ஆம் ஆத்மி பதிலடி கொடுத்து வருகிறது.!