Part – 3 : ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் ஜென் ஆல்ஃபா கிட்ஸ்
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் வீடுகளில் பெற்றோருக்கும் டஃப் கொடுப்பவர்களாக 2010- க்கு பிறகு முளைத்த ஜென் மற்றும் ஆல்ஃபா தலைமுறையினர் இருக்கிறார்கள்.
கடந்த 8 ஆண்டுளாக பிரபல சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியராக இருப்பவர், ஜென் ஸீ மற்றும் ஆல்பாக்களுக்கும் மூத்த தலைமுறைக்கும் இடையிலான உறவு முறையைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.
நான்காம் வகுப்பில் படிக்கும் ஆல்பா குட்டீஸ்கள், தங்களைச் சுற்றி வாழும் மூத்த தலைமுறையிடம் என்ன எதிர்பாக்கிறார்கள் என்பதை வகுப்பறையில் பழகும் ஆசிரியர்களால் அதிகம் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் லாக் புக் உண்டு. தினமும் நடத்திய பாடங்கள், ஹோம் ஒர்க், திருத்திய டெஸ்ட் விவரங்கள், தொடர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஆசிரியர் தினமும் அதில் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நாளில் 4ம் வகுப்பு மாணவி ஆசிரியரிடம் வந்து அன்று ஒரு பீரியடில் மாற்று ஆளாக வரவேண்டிய ஆசிரியர் வரவில்லை என்று மற்றொரு ஆசிரியரிடம் புகார் செய்கிறாள். அவள் புகார் செய்ததும் மற்ற பிள்ளைகளும் வந்து மாற்று ஆசிரியரால் ஏன் வர முடியவில்லை? அதற்கு என்ன காரணம் ? என்று அந்த ஆசிரியரை ரவுண்டு கட்டினர்.
நீங்கள் அந்த பீரியடுக்கு வந்திருக்கலாமே என்று துணைக் கேள்வியையும் எழுப்பினார்கள். தான் வேறு வகுப்பில் டைம் டேபிள் படி போக வேண்டும் என்பதால் வர முடியாது என்று பதில் ஆசிரியர் பொறுமையாக பதில் கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.
இந்த கெடுபிடி முடிந்ததும் லாக் புக்கை எடுத்துப் பார்த்த ஆசிரியருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. லாக் புக்கில் ஆசிரியர் கையெழுத்தை வாங்க பொறுப்பாக இருந்த மாணவி, ” இந்த பீரியடில் ஆசிரியர் யாரும் வரவே இல்லை ” என்று பிஞ்சு கையெழுத்தில் பதிவு செய்திருந்தாள். அதைப் பார்த்து ஆசிரியருக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனாலும் மாணவியிடம் கோபப்பட முடியவில்லை . அவள் உண்மையைத் தானே எழுதி இருந்தாள்
வகுப்புத் தலைவியான அவள் உண்மையில் என்ன நடந்தது என்பதை எழுதி தனது பொறுப்பை மிகச் சரியாகச் செய்திருந்தாள். இந்த சம்பவம் அந்த ஆசிரியருக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தந்தது
இக்காலக் குழந்தைகள் நம்மை கூர்ந்து கவனிக்கிறார்கள். “விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். நேரம் தவறாதே. குறிப்பிட்ட வேலையை செய்து முடி. பொறுப்பை ஏற்றுக் கொள்” என்று வாய்மொழி உத்தரவுகளாக மட்டும் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
நாம் உத்தரவு போட்ட எல்லா ஒழுக்கங்களையும் நாமே கடைபிடிக்க வேண்டும் என்று இக்காலக் குழந்தைகள் கறாராக எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர் ஒரு விதியை அவர்களிடம் வலியுறுத்தினால், அந்த விதியை ஆசிரியர் முதலில் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அந்த ஆல்ஃபா நாற்றுகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.
இந்த ஆல்ஃபா தலைமுறையிடம் மட்டுமே காணப்படும் முக்கியமான குணாதிசயம் இது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேள்வி கேட்கிறார்கள். எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். கவனித்த விஷயத்தை தங்களுக்குள் அலசுகிறார்கள். ஒரு விஷயத்தை தாங்கள் கட்டாயம் செய்யத்தான் வேண்டுமா என யோசிக்கிறார்கள். தங்களுக்கு அட்வைஸ் செய்யும் பெரியவர்கள், அதை பினபற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்றார் அந்த ஆசிரியர்.
அவர் சொன்ன மேலும் சில விஷயங்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.தலைமுறைகள் தொடரும்.

