2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்காக ஜெய்பீமை தயாரித்தவர்கள் ஜோதிகா மற்றும் சூர்யா. திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருந்தவர் த.செ.ஞானவேல். சூர்யா நடித்த ரத்தச்சரித்திரம் படத்தின் வசனகர்த்தாவாக திரைத்துறைக்குள் வந்த ஞானவேல் 2017-ல் வெளியான ’கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். ஜெய்பீம் இவருக்கு இரண்டாவது படமாக அமைந்தது. கொரோனா நெருக்கடியில் தியேட்டரில் வெளியாக முடியாத சூழலில், ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது ஜெய்பீம். சிறந்த படம், சிறந்த நடிகை, நடிகர், இயக்குநர் பிரிவுகளில் பன்னாட்டு திரைவிழா விருதுகள், தமிழ்நாடு அரசின் திரைவிருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை படம் குவித்தது.
வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வரவுக்குப் பிறகு பெருமளவில் தமிழ் சினிமா தலித் அரசியலைப் பேசும் ஊடகமாக மாறியிருக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், பகுதியாகவும் பல படங்களில் தலித் அரசியலை இவர்கள் பேசியிருந்தாலும் பெரும்பாலும் அவை முழுமையடையாத முயற்சிகள் எனும் தன்மையையே கொண்டிருந்தன. இதில் அவற்றைக் குறை சொல்லும் நோக்கம் நமக்கில்லை, மாறாக ஜெய்பீமுக்கான பாதை அமைத்துக் கொடுத்தவை அவையே, இதுவோர் கலை இயக்கத்தின் (Cinema Movement) தொடர்ச்சி என்றுதான் உயர்த்திப் பிடிக்கிறோம். அந்த அளவுக்கு முழுமையான ஆக்கமாக த.செ.ஞானவேலின் இந்த ’ஜெய்பீம்’ அமைந்திருந்தது.

இந்தச் சமூகத்தால், சக மனிதர்களால் பட்டியலினத்தவர் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகிறார்கள், வன்மத்துக்கு ஆளாகிறார்கள் என்று கடிவாளம் கட்டிய குதிரையாய் ஒரே திசையில் சிந்தித்துக் கொண்டிருந்த நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஜெய்பீம். அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை, இந்த சர்வாதிகாரமிக்க அரசு எந்திரத்தால் இருளர், குறவர், ஒட்டர் முதலான பழங்குடியின மலைவாழ் மக்கள் எப்படியெல்லாம் துச்சமாக நடத்தப்படுகிறார்கள், அவர்களின் உயிரும், உடமைகளும், தன்மானமும் எத்தனை மலிவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது கண்டு துடித்துப் போகிறோம். அத்தனை நேரமும், அவர்கள் காவல்துறையின் சோம்பலுக்கு முன்பாக, எளிமையான சந்தேகத்துக்கு இலக்காகிவிட்ட துரதிருஷ்டசாலிகள், பாவம் எனும் எண்ணமும் கூட ஒரு மூலையில் இருந்தது. ஆனால், எஸ்.ஐ குருமூர்த்தி கொள்ளைக் கும்பலுடன் கரம் கோத்துக்கொண்டு, தெரிந்தேதான் இந்த அநீதியை இழைத்திருக்கிறான் என்று தெரியவரும் போது, நமக்கு சக மனிதர்கள் மீதான நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடுகிறது.
போலவே, பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளுக்கு படம் சொல்லும் தீர்வுகள் முதிர்ச்சியானவை மற்றும் நம்பிக்கை தருபவை. மக்கள் மன்றத்துக்கு முன்பான அறவழித் தெருமுனைப் போராட்டங்களையும், நீதிமன்றத்தில் சட்டப் போராட்டங்களையும் ஜெய்பீம் தீர்வாக முன்னிறுத்துகிறது. அசுரன், கர்ணன் போன்று இது வன்முறையைத் தீர்வாக்கவில்லை.