ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில், இன்று மதியம் 3 மணியளவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்திருந்தது. இந்த தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக அக்கட்சியின் நிறுவனர் அபீஜித் திப்கே வந்துகொண்டிருந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் அவரைத் தங்களது தோள்களில் சுமந்து முழக்கமிட்டபடி மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர்.
அப்போது கூட்டத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், திடீரென அபீஜித் திப்கேவின் கழுத்தில் இருந்த துண்டைப் பிடித்து இழுத்து, அவரை அடுத்தடுத்து பலமுறை கன்னத்தில் அறைந்து கீழே தள்ள முயன்றனர். கூட்ட நெரிசலில் அவர் மீதான தாக்குதல் தொடர்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு தழுவிய போராட்டம்:
ஒரு நையாண்டி அரசியல் இயக்கமாகத் தொடங்கப்பட்ட “காக்ரோச் ஜனதா கட்சி’, சமீபத்தில் டெல்லியில் உள்ள மாணவர்களைத் திரட்டித் தங்களது நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அமிர்தசரஸ், புனே, பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.