“ஜேசன் நீங்க நல்லவரா, கெட்டவரா, இல்ல பழக்கடை மூர்த்தியா?”- இந்த வாரம் பிக் பாஸில் நடந்தது என்ன? | bigg boss weekly roundup – an analysis on Jason

Spread the love

எனவே ஒரேயொருவருக்கு தங்கத் தட்டில் வைத்து கொடுக்க முடியாது. அது சரியான போட்டி மனப்பான்மையாகவும் இருக்காது. அந்த வகையில் தினம் ஒரு ஜூனியர் பாஸ் என்கிற கோணத்தை போட்டியாளர்கள் சிந்தித்தது சரியானது. அதை சரியாக செயல்படுத்தியிருந்தால் தினம் தினம் பார்வையாளர்களுக்கு சுவாரசியம் கிட்டியிருக்கும். 

ஜூனியர் பிக் பாஸ் நாற்காலிக்கு நடந்த உக்கிரமான சண்டைகள்

மாறாக, ஓர் அறிமுக நடிகருக்கு இரண்டு படங்கள் ஹிட் ஆனாலே முதலமைச்சர் கனவு வந்து விடுவதைப் போல ஆளாளுக்கு ‘நானும் ஜூனியர் பிக் பாஸ் ஆக விரும்புகிறேன்” என்று அந்தப் பதவியை மியூசிக்கல் சேர் மாதிரி ஆடினார்கள். அதிலும் முனியம்மா செய்ததெல்லாம் பயங்கர அலப்பறை. ஏதோ குழந்தை யானைச் சவாரி செய்ய ஆசைப்பட்டதைப் போல “கொஞ்ச நேரம் ஏறிட்டு இறங்கிடறேன். நீங்க சொல்றப்ப பதவியை விட்டுடுவேன். அதுல உக்காந்து பார்க்க ஆசையா இருக்கு. அம்புட்டுதேன்’ என்று சொன்னதையெல்லாம் நம்பி ஏற்றி வைத்து அழகு பார்த்தது மோசமான முடிவு. 

வீட்டை வழிநடத்துவது, டாஸ்க்குகளை யோசிப்பது, போட்டியாளர்களுக்கு விளக்குவது.. இதையெல்லாம் செய்ய பிக் பாஸில் பெரிய டீமே இருக்கும். ஆனால் ஒற்றையாளாக இதைச் சாதித்தார் வினோத் பாபு. ஒரு நீண்ட டாஸ்க்கை யோசித்து சிறப்பாக ஆடச் செய்தார். பதவியில் இருந்த இரு நாட்களும் தூங்காமல் போட்டியாளர்களை கண்காணித்தார். 

வினோத்தின் பதவிக்காலத்தில் சில சறுக்கல்களும் நிகழ்ந்தன. ஷாதிகாவை லீடர் ஆக்கி விட்டு, கிச்சன் அணி உருவான பிறகு மீண்டும் லீடர்ஷிப் டாஸ்க்கை ஆரம்பித்து ஜேசன் லீடர் ஆனது குழப்பத்தை ஏற்படுத்தியது. ‘பிக் பாஸ் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்” என்று தனது கடுமையான ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார் ஷாதிகா. 

மற்றபடி ‘நவம்பர் ஃபூல்’ என்கிற சீக்ரெட் டாஸ்க் உள்ளிட்டு வினோத் செய்த சம்பவங்கள் அனைத்தும் அருமையானவை. வினோத்தை பதவி இறக்க போதுமான காரணங்கள் இல்லையென்றாலும் கூட ஷாதிகா உள்ளிட்டவர்கள் செய்த அழும்பு காரணமாக அவரது பதவி பறிபோனது. 

‘நான் ஒரு ஜீரோ. எதுவுமே தெரியல’ – கலங்கிய முனியம்மாள்

அடுத்த ஜூனியர் பிக் பாஸாக வந்தவர் முனியம்மாள். ‘முதல் பெண் குரல்’ என்கிற பெருமையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நாம் ஆரம்பத்திலிருந்தே பார்த்து வருகிறோம். முனியம்மாள் சுவாரசியமான போட்டியாளராக இருந்தாலும் அவரிடம் தலைமைப் பண்பு என்பது சுத்தமாக இல்லை. இது அவருக்கே தெரியும். இருந்தாலும் ‘நானும் சைக்கிள் ஓட்டிப் பழகணும்’ என்கிற மாதிரி இருக்கையில் ஏறி அமர்ந்து விட்டார். 

அமர்ந்த பிறகுதான் அந்த முள் கிரீடத்தின் வலியும் சுமையும் முனிக்கு தெரிந்தது. அதுவரை டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டு வினோத் தன்னை செய்த கிண்டலையெல்லாம் டிவியில் பார்த்து ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துக் கொண்டிருந்தார். விட்டிருந்தால் ‘பாஸ்.. இந்த டிவில சன்டிவி வருமா.. ரொம்ப போரடிக்குது.. சீரியல் பார்க்கப் போறேன்’ என்று கூட கேட்டிருப்பார். 

டாஸ்கிற்கான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்த ரூமிற்குள் நுழைந்த பிறகு, பொம்மைக் கடையில் நுழைந்த குழந்தை மாதிரி விக்கித்துப் போனார் முனி. எதை எடுப்பது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றைப் பாராட்டியாக வேண்டும். தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பது ஒருவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். கூடுதலாக அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதற்கு பெரிய மனமுதிர்ச்சி வேண்டும். “நான் ஒரு ஜீரோ. ஏதோ ஆசைப்பட்டு வந்துட்டேன். நான் இதுக்கு லாயக்கில்லை” என்று கலங்கிய முனியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பல விஷயங்களை தன்னியல்பாக சிந்திக்கும் முனியம்மாள், சற்று முனைப்புடன் முயன்றிருந்தால் இந்தப் பதவியையும் கையாண்டிருக்க முடியும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *