ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்…CJP-யின் அடுத்த மூவ் என்ன? தீபாவளி வரை அபிஜித் தீப்கேவின் NEW PLAN! – Kumudam

Spread the love

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளான எஸ்ஐஆர் (SIR) மூலம் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்பினர் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என அபிஜித் தீப்கே அறிவித்தார். இதற்கிடையே, போராட்டத்தைத் தடுக்கும் வகையில் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்ததுடன், ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் கட்டுப்பாடுகளையும் விதித்தது.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, கடந்த 14-ம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர்களான சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்டோர் ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்திய தேசியக் கொடியைக் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஜேபி சார்பில் அக்டோபர் 16-ம் தேதி மாலை 5 மணியளவில் டெல்லி கனாட் பிளேஸ் மத்தியப் பூங்காவில் தேசியக் கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டே வீட்டில் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு அக்டோபர் 16-ம் தேதி மதியம் சென்ற டெல்லி காவல்துறை மூத்த அதிகாரிகள், காவல்துறையின் அனுமதியின்றி சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்தக் கூடாது என அவரிடம் நோட்டீஸ் வழங்கினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனாட் பிளேஸ் மத்தியப் பூங்கா பகுதியில் 28,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் ஜாண்டேவாலன் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட அபிஜித் தீப்கேவை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். மேலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 163, 126, 170 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிஜேபிக்கு ஆதரவாக, டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேஹா போரா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நேஹா போராவும் கைது செய்யப்பட்டார். டெல்லியில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், நேஹா போரா பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அக்டோபர் 17-ம் தேதி பிற்பகலில் அபிஜித் தீப்கே டெல்லி சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அடுத்த ஓராண்டுக்கு காவல்துறையின் அனுமதியின்றிப் போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லியில் இன்று நடைபெற உள்ள தசரா விழாவில், ராவணனின் உருவ பொம்மையுடன் சேர்த்து 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அபிஜித் தீப்கே, “எங்களை இலவசமாகப் பிரபலப்படுத்துவதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தீபாவளி வரை போராட்டம் இல்லை!

இந்தச் சூழலில், வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதுவரை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் எந்தப் போராட்டமும் நடத்தப்படாது என அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். மேலும், கட்சியினர் அனைவரும் போராட்டங்களைத் தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு, தங்களது குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *