ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்.. ராகுல் காந்தி கைது! – Kumudam

Spread the love

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணி நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டு வாக்குத் திருட்டு நடைபெறுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆளும் பாஜகவுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்யவும், அவரைப் பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் இன்று (அக். 6) பேரணியாகப் புறப்பட்டனர்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் தேசிய மாணவர் சங்க (NSUI) உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

நாடாளுமன்றச் சாலையில் நிதி ஆயோக் அலுவலகம் அருகே பேரணி வந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி காவல்துறையினர் அவர்களைத் தடுப்புகளை (Barricades) அமைத்துத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தடுப்புகளின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பெரும் பரப்பரப்பும் களேபரமும் நிலவியது.

அதனையடுத்து, அங்கிருந்த அகில இந்திய வானொலி நிலைய (ஆகாஷ்வாணி பவன்) வளாகத்திற்குள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை முதல் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் அமர்ந்து எதிர்க் கட்சித் தலைவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியை நிலைநாட்டவும் அசாம்பாவிதங்களைத் தவிர்க்கவும் அப்பகுதியில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து போராட்டம் நீடித்த நிலையில், மாலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் அவர்களுடன் இருந்த ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *