மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை முறைப்படி ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 பேரில் நிம்பல்கர் என்ற எம்.பி. மட்டும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர தயக்கம் காட்டி வந்தார். ஆனால் இப்போது அவரும் ஏக்நாத் அணியில் சேரப்போவதாக வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். இதையடுத்து 6 பேரும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதில் இருந்து தப்பித்துள்ளனர்.
அடுத்து உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் தங்களது பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
இதனால் இன்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை மாலையில் கூட்டி இருக்கிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழைகாலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.

இதில் 20 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 6 எம்.பி.க்களும் அணி மாறியது குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “‘அதிருப்தியாளர்களின் விசுவாசம் மற்றும் நற்பெயர் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதை அவர்களின் நடவடிக்கைகள் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளன. பேராசை பிடித்த எம்.பி.க்களாகிய உங்களின் விசுவாசம், உங்கள் நற்பெயர் வெட்கமின்றி விற்கப்படுகிறது.
அரசாங்கம் பாரபட்சமாகச் செயல்படுகிறது. பொதுப் பணத்தை அரசியல் ரீதியான நிதியாகப் பயன்படுத்துகிறது. சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) தலைவர்களின் ஆதரவுடன் அதிருப்தி எம்பிக்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகவும், மகாவிகாஷ் அகாடி மற்றும் இந்தியாக் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் அவர்கள் பிரசாரம் செய்து வெற்றி பெற்றனர்.
வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராகவும், உங்கள் தொகுதிகளில் இந்தியாக் கூட்டணிக்காகவும் வாக்களித்தனர். உங்கள் பேராசையால், வெட்கமின்றி நீங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்திருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது மும்பை மாநகராட்சியில் சிவசேனா(உத்தவ்) கட்சி கவுன்சிலர்களையும் தங்களது பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டே நடவடிக்கை எடுத்துள்ளார்.