Sports
oi-Yogeshwaran Moorthi
டெக்ஸாஸ்: பிரான்ஸ் அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியின் இந்த வெற்றிக்கு பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பேவை கட்டுப்படுத்திய வியூகமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாதித்திருந்தது. இதனால் ஸ்பெயின் அணிக்கு பதிலடி கொடுக்க பிரான்ஸ் அணி தீவிரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் தொடங்கப்பட்டது. தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஸ்பெயின் அணி 22வது நிமிடத்திலேயே பெனால்டி மூலம் முதல் கோலை அடித்தது.

தொடர்ந்து 58வது நிமிடத்தில் பெட்ரோ பெர்ரோ 2வது கோலை அடிக்க, பிரான்ஸ் அணி பிரான்ஸ்க்கு நடையை கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் கோல்டன் ஃபூட் ரேஸில் முன்னணியில் இருந்த பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்பேவால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. அவரை கட்டுப்படுத்த ஸ்பெயின் அணி பயன்படுத்திய வியூகம் பலருக்கும் ஒரு ப்ளூபிரிண்டாக மாறியுள்ளது.
லெஃப்ட் விங்கில் இருந்து எம்பாப்பே வேகமாக வந்து ட்ரிபிளிங் செய்து கோல் அடிப்பதில் வல்லவர். அவரை தடுக்க வேண்டுமென்றால், அவருக்கு நிகராக வேகம் மிகவும் அவசியம். ஆனால் ஸ்பெயின் அணி டிஃபெண்டரை அனுப்பாமல், மிட் ஃபீல்டர்களை வைத்தே எம்பாப்பேவுக்கு தண்ணீர் காட்டியது. ஏனென்றால் ஸ்பெயின் அணியின் மிட் ஃபீல்டர்களான ரோட்ரி மற்றும் ரூயிஸ் இருவரும் தான் பந்தை கட்டுப்படுத்தினர்.
மிட் ஃபீல்டரில் இருந்து எம்பாப்பேவுக்கு பந்து போனால் தானே அவரால் கோல் அடிப்பதை சிந்திக்க முடியும். இதனால் எம்பாப்பே பக்கம் பாஸ் போகவிடாமல் இரு வீரர்களும் தடுத்து நிறுத்தினர். அதனை மீறி பாஸ் சென்றுவிட்டால், டிஃபெண்டருடன் சேர்ந்து மிட் ஃபீல்டரும் தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த டபுள் டீம் வியூகத்தால், எம்பாப்பேவால் பாக்ஸிற்குள் கூட செல்ல முடியவில்லை.
ஒரு கட்டத்தில் விரக்தியின் விளிம்பில் ஆக்ரோஷமாக ஆடிய எம்பாப்பேவுக்கு 86வது நிமிடத்தில் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இறுதியாக பிரான்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் எம்பாப்பே சோகத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். மறுபக்கம் ஸ்பெயின் அணியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.