இராதாபுரம் தொகுதியில் உள்ள மீனவ கிராங்களுக்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்ததோடு, அவர்களின் தேவைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் போராட்டங்களிலும் பங்கேற்றார். அதனால் அவருக்கு இராதாபுரம் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசியலுக்குப் புதியவரான அவர், ஏழாவது முறையாக தேர்தலில் களம் காணும் பழுத்த அரசியல்வாதியான அப்பாவுவை எதிர்த்துக் களமிறங்கினார்.
கிராமங்கள் மிகுந்த இராதாபுரம் தொகுதியில், த.வெ.க தொண்டர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வீடாகச்சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதனால் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் அவர் நேரில் சந்தித்து வாக்கு கேட்டார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்தத் தொகுதியில், மட்டும் 55-க்கும் அதிகமான குவாரிகள் இருக்கின்றன.

குறிப்பாக இருக்கன்துறை கிராமத்தைச் சுற்றிலும் 30-க்கும் அதிகமான குவாரிகள் செயல்படுகின்றன. அதனால் விவசாயம் சீரழிவதை நேரில் கண்ட அவர், விவசாயம் தழைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கொடுத்த வாக்குறுதிக்கு நல்ல பலன் கிடைத்தது.
அதனால், இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அரசியல் பலம் மற்றும் பண பலம் மிகுந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் ஆகியோரை வீழ்த்தி அரசியல் களத்தில் தனி முத்திரை படைத்துள்ளார். டாக்டர்.சதிஷ் கிறிஸ்டோபர் இந்தத் தொகுதியில், சபநாயகர் அப்பாவுவை விடவும் 12,303 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இங்கு யாரும் ஜாம்பவான் கிடையாது
இது குறித்து அவர் கூறுகையில், “இந்தத் தேர்தலில் பணநாயகம் வீழ்ந்து ஜனநாயகம் வென்றுள்ளது. பணத்தின் மூலம் வெற்றியை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் கணக்கு பொய்த்துள்ளது. இராதாபுரம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். குவாரிப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். சபாநாயகரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தில் அனைவரும் சமம். இங்கு யாரும் ஜாம்பவான் கிடையாது” என்றார்.