International
oi-Vignesh Selvaraj
தெஹ்ரான்: தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. டிரம்ப் கூறியிருப்பது ஒரு புதிய பொய் என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடர்ந்த போர் ஐந்து மாதங்களாக நீடித்து வருகிறது. இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் தடைபட்டது.

இந்த நிலையில், கப்பல்கள் அவ்வழியே கடந்து செல்லும் முன்பு ஈரானிடம் அனுமதி பெற்று போக்குவரத்துக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்ததுடன், தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் ஓமன் கடற்பகுதியில் வந்த வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதால், அந்த ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஈரான் மீது மீண்டும் வான்வழி தாக்குதல்களையும் தீவிரப்படுத்தினார்.
அதற்கு பதிலடி தரும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியது. கடந்த வாரம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகள் புதிதாகத் தாக்குதல்களை நடத்துவதைத் தள்ளி வைக்குமாறு தன்னிடம் கேட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டியதை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, ஹார்முஸ் நீரிணையை உடனடியாக முற்றிலுமாகத் திறப்பதையும், அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இதற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும். டிரம்ப் கூறியிருப்பது ஒரு புதிய பொய் மட்டுமே, அதைத் தவிர வேறொன்றுமில்லை. ஈரான் ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில், எந்தவொரு தாக்குதல் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளது.