டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

Spread the love

பழைய ரேடியோக்களில் அலைவரிசை கிடைக்காதபோது வரும் `உஷ்’ என்ற இரைச்சலிலும், பழைய ஆண்டெனா தொலைக்காட்சிகளில் அலைவரிசை இல்லாதபோது திரையில் தெரியும் கறுப்பு-வெள்ளைப் புள்ளிகளிலும் நமது பிரபஞ்சத்தின் தொடக்க கால அதிர்வுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?!

இரைச்சல் சத்தம்
இரைச்சல் சத்தம்

சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தபோது அளப்பரிய ஆற்றலும் ஒளியும் உருவானது. பிரபஞ்சம் விரிவடைந்து குளிர்வடையத் தொடங்கியதும், அந்தத் தொடக்க கால ஒளியின் அலைநீளம் நீண்டு, இன்று அது நுண்ணலைகளாக (Microwaves) மாறியுள்ளது.

இதற்கு அண்ட நுண்ணலை பின்னணிக் கதிர்வீச்சு (Cosmic Microwave Background – CMB) என்று பெயர். ரேடியோவில் அலைவரிசை இல்லாதபோது நாம் கேட்கும் சத்தத்தில் சுமார் 1% இந்தப் பெருவெடிப்பின் எச்சமான கதிர்வீச்சினால் ஏற்படுகிறது.

1965-ஆம் ஆண்டு, அர்னோ பென்சியாஸ் (Arno Penzias) மற்றும் ராபர்ட் வில்சன் (Robert Wilson) என்ற இரு விஞ்ஞானிகள், நியூஜெர்சியில் ஒரு பெரிய ரேடியோ ஆண்டெனாவைச் சோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விசித்திரமான இரைச்சல் பின்னணியில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

அது நியூயார்க் நகரத்தின் இரைச்சலாக இருக்குமோ அல்லது ஆண்டெனாவில் தங்கியிருந்த புறாக்களின் எச்சத்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்குமோ என நினைத்து, ஆண்டெனாவை முழுமையாகச் சுத்தம் செய்தனர். ஆனாலும் அந்த `உஷ்’ இரைச்சல் சத்தம் நிற்கவில்லை.

அந்தச் சத்தம் பூமியில் இருந்தோ, நமது சூரிய குடும்பத்தில் இருந்தோ வரவில்லை; ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் அனைத்துத் திசைகளில் இருந்தும் சீராக வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான மறுக்க முடியாத ஆதாரமாக இது அமைந்தது. இதற்காக 1978-ல் இவர்களுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இரைச்சல் சத்தம்
இரைச்சல் சத்தம்

இந்த CMB கதிர்வீச்சுதான் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பழமையான ஒளியாகும். இந்த நுண்ணலைகளை மனிதக் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஆண்டெனாக்கள் இவற்றை உணர்ந்து இரைச்சலாக வெளிப்படுத்துகின்றன.

இனிமேல் ரேடியோவிலோ டிவியிலோ அலைவரிசை கிடைக்காத அந்தச் சலிப்பான இரைச்சலைக் கேட்கும்போது எரிச்சலடைய வேண்டாம்.

நாம் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையான பிரபஞ்சத்தின் முதல் மூச்சுக்காற்றை, பெருவெடிப்பின் எதிரொலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *