டெல்லி பெண்களுக்கு ரூ.2500 : 3 குழந்தைக்குள் இருந்தால் தகுதி; பணம் கையில் கிடைக்காது!' – முழு விவரம்

Spread the love

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க அறிவித்த தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது அத்திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.

டெல்லி `லக்ஷ்மி யோஜனா’ என்ற அத்திட்டத்திற்கு தகுதி பெற நிபந்தனைகள் மற்றும் செலவுக் கட்டுப்பாடுகளுடன் கூடிய நீண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. அவற்றில் குடும்பத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். இந்த திட்டத்தில் டெல்லியில் சுமார் 17 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த நிபந்தனைகள் காரணமாக எத்தனை பெண்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற விபரம் வெளியிடவில்லை.

இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது போன்ற வழக்கமான பணப் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகள் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற முடியாது.

அதற்கு பதிலாக, அவர்கள் முழுத் தொகையையும் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) அல்லது நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்யலாம். அல்லது மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணய (CBDC) பணப்பையின்(வாலட்) மூலம் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொள்ள முடியும். அதனை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

பயனாளிகளுக்கு இரண்டு விருப்ப தேர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, வீட்டுச் செலவிற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 CBDC வாலட்டில் வரவு வைக்கப்படும். அதே நேரத்தில் எஞ்சிய ரூ.1,500 தானாகவே RD அல்லது FD கணக்கில் டெபாசிட் செய்யப்படும். பயனாளி இரண்டாவது விருப்பத்தைத் தேர்வுசெய்தால், முழுத் தொகையான ரூ.2,500 ஒவ்வொரு மாதமும் ஒரு RD அல்லது FD இல் முதலீடு செய்யப்படும், இது காலப்போக்கில் ஒரு பெரிய தொகையாக கிடைக்கும்.

இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பயனாளிகளுக்கு உடனடி நிதி உதவி மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த இரண்டு விருப்பங்கள் கொண்ட கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பயனாளிகள் காலப்போக்கில் ஒரு சேமிப்புத் தொகையை உருவாக்குவதை உறுதி செய்கிறது.

அதேசமயம் தங்களின் நீண்டகால சேமிப்பை அதிகரிக்க விரும்பும் பயனாளிகள், ஒவ்வொரு மாதமும் முழுத் தொகையான ரூ. 2,500-ஐ தொடர் வைப்பு (RD/FD) மூலம் சேமிக்க முடியும். இந்தத் தேர்வு, திட்டக் காலம் முழுவதும் வட்டியுடன் ஒரு பெரிய தொகையைச் சேர்க்க அவர்களுக்கு உதவுகிறது. பெண்களுக்குத் தேர்வு செய்யும் உரிமையை அளித்து, நிதி நிலைத்தன்மையையும் சொத்து உருவாக்கத்தையும் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்,” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *