ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு, ஈரானும், அமெரிக்காவும் எந்த அறிவிப்புமின்றி தங்களுக்குள் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. அமைதியாக இருதரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று அப்போது கூறப்பட்டது.
ஈரான் தாக்குதல்
ஆனால், இந்தத் தாக்குதல் நிறுத்தத்தை உடைத்து நேற்று முன்தினம் (ஜூலை 28), ஜோர்டனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
நேற்று முன்தினம் அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்துக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ட்ரம்ப் பேச்சு
ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடியாக நேற்று (ஜூலை 29), அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் பேசும்போது ட்ரம்ப், “நாம் ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். அவர்களுக்குப் பலத்த அடியைக் கொடுக்கப் போகிறோம். அவர்கள் மிகக் கொடூரமான தாக்குதலைச் சந்திக்கப் போகிறார்கள்” என்று கூறியிருந்தார்.
சக்திவாய்ந்த தாக்குதல்
அதற்கு ஏற்ற மாதிரி நேற்று ஈரான் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. இது குறித்து அமெரிக்காவின் ராணுவ படையில் ஒன்றான மத்திய கட்டளையகம் (CENTCOM) கூறுகையில்…
“அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கின.
மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நேற்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதலுக்குப் பதிலடியாகவே இநக்ச் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.