Business
oi-Velmurugan P
சென்னை: அண்மையில் ஒரு தங்க நகைக்கடையின் விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அதில், “தங்கத்தை அடகு வைத்து வட்டிப் பொறியில் சிக்குவதை விட விற்பதே லாபம்” என்று கூறியிருந்தார்கள். அது எப்படி, தங்கத்தை விற்றால் லாபகரமாக இருக்கும்? தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகத்தானே ஏறி வருகிறது? இதில் எது உண்மை? தங்கத்தை அடகு வைப்பது நல்லதா அல்லது விற்பது நல்லதா என்று, ‘அண்ணாமலை’ படத்தில் ராதாரவி போலக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாக வரவில்லை; தவறாகவே வந்தது. அந்த விவரங்களைப் பார்ப்போம்.
இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் முன்பே சில அடிப்படை உண்மைகளைக் கூறிவிடுவோம். தங்க நகை மீது நம் மக்களிடையே ஓர் உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது. தங்கத்தை அடகு வைக்கப் போகும் மக்கள், எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு ஆண்டுதோறும் வட்டி கட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கட்டிய வட்டித்தொகை என்பது மிக அதிகமாகவே இருக்கும். புதிதாக நகையை வாங்க அதிகப் பணம் கொடுக்க முடியாது என்பதுதான் அதற்கு முதல் காரணம். ஆனால், நிஜமான கணக்கீடு வேறு!

அந்தக் கணக்கீட்டைத்தான் ‘அண்ணாமலை’ படத்தில் வருவது போலக் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அடகு வைக்கும் போது 85% வரை பணம் தருகிறார்கள். பொதுவாக அதிகப் பணம் பெற விரும்பும் ஏழை மக்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ல்லது தனியார் நகை அடகுக் கடைகளிலேயே அடகு வைக்கிறார்கள். இவற்றில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 18% முதல் 30% வரை மிக அதிகமாக இருந்து வருகிறது.
உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்திற்கு 85% கடனாக ரூ. 85,000 பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 24% சராசரி வட்டியில், 3 ஆண்டுகளுக்கு நீங்கள் கட்டும் வட்டி மட்டுமே ரூ. 61,200 ஆகும். 3 ஆண்டுகள் கழித்து நகையை மீட்க நீங்கள் அசல் + வட்டி சேர்த்து மொத்தம் ரூ. 1,46,200 கொடுக்க வேண்டும். 3 ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்வு, நீங்கள் கட்டிய இந்த வட்டித் தொகையை விடக் குறைவாக இருந்தால், உங்களுக்குக் கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டுவிடும்.
அதேநேரம், தங்க நகையைப் பொதுத்துறை வங்கிகளிலோ அல்லது கூட்டுறவு வங்கிகளிலோ அடகு வைத்தால், வட்டி விகிதம் வெறும் 8% முதல் 9% வரைதான் இருக்கும். அதன்படி, ஒரு லட்சத்திற்கு மாதம் ₹666.66 ரூபாய் வட்டி கட்ட வேண்டியிருக்கும் (ஆண்டுக்கு ₹8,000 தான்). ஒரு சவரன் தங்கத்தின் விலை 8% அல்லது 9%-க்கு மேல் ஏறுகிறது என்றால், நகையை அடகு வைப்பது லாபம்தான். அதேபோல் தங்கத்தின் விலை 18% முதல் 20% வரை ஏறினாலும் அடகு வைப்பது லாபமே! ஆனால், 8%-க்கும் குறைவான ஏற்றம் அல்லது விலையே ஏறவில்லை என்றால், உங்களுக்குப் பெரிய லாபம் இருக்காது.
குறுகிய காலத்திற்கு அடகு வைப்பது லாபகரமாக இருக்கும். ஆனால், நீண்ட காலத்திற்கு அடகு வைத்து வட்டி கட்டுவது என்பது லாபகரமாக இருக்காது. அதிகபட்சம் ஓராண்டிற்குள் நகையை மீட்டுவிடுவது நல்லது. மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகளுக்கு வட்டியை மட்டும் கட்டிவிட்டு, “நகையை எப்போதாவது மீட்டுவிடலாம்” என்று நம்புவது வட்டிப் பொறியில் சிக்குவதற்குச் சமம்.
பொதுவாகத் தங்கத்தின் விலை சராசரியாக 10% முதல் 15% வரை ஏறும். ஆனால், தங்கத்தின் விலை 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு ஏறியது. கடந்த 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது அசுரத்தனமான வளர்ச்சியாக இருக்கிறது. “தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமா?” என்று கேட்டால், வாய்ப்பு அதிகம். ஒரு சவரன் ₹2 லட்சம் வரை கூட உயர்வு பெறலாம் என்றே பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருந்தாலும், அதிகப்படியான வட்டிக்குக் கடன் வாங்குவது என்பது லாபகரமாக இருக்காது. பொதுத்துறை வங்கிகளில் அடகு வைத்து நகைகளை மீட்டுக் கொண்டால் லாபகரமாக இருக்கும். மாறாக, தனியார் நிதி நிறுவனங்களில் அதிகத் தொகைக்கு அடகு வைத்து வட்டி கட்டுவது என்பது கிட்டத்தட்ட நகையை இழப்பதற்குச் சமம் அல்லது நகையின் மதிப்பை விட அதிகப் பணம் கட்டி வட்டிப் பொறியில் சிக்குவதற்குச் சமம். எனவே, கவனமாகக் கையாள வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நகையைப் பொதுத்துறை வங்கியில் அடகு வைத்தாலும், மாதம் மாதம் சிறுகச் சிறுக ஒரு தொகையைக் கட்டி வர வேண்டும். தனிநபர் கடன் (Personal Loan) போல் பாவித்து, மாதம் மாதம் இ.எம்.ஐ. பாணியில் அசல் மற்றும் வட்டியைச் சேர்த்துச் செலுத்தி வந்தால், தங்கத்தை அடகு வைப்பது நிச்சயம் லாபகரமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

