தங்க மோதிரம் எப்படி தயாராகிறது? வெளியானது ‘தாய்மாமன்’ திட்டத்தின் முழு வீடியோ! – Kumudam

Spread the love

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், அந்த மோதிரங்கள் தயாராகும் விதம் தொடர்பான வீடியோவை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

மோதிரத்தின் வடிவமைப்பு முதல் உற்பத்தி, தரப் பரிசோதனை, பேக்கிங் வரை பல்வேறு கட்டங்களில் நடைபெறும் பணிகள் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“உங்கள் அண்ணனோட அரசில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்படும்” என்ற விஜயின் குரலுடன் வீடியோ தொடங்குகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் மோதிரம் ஒரு கிராம் எடையிலும், 22 காரட் ஹால்மார்க் தரத்திலும் தயாரிக்கப்படுவதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பொருந்தும் வகையில் அளவீடுகள் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டு, கலைநயத்துடன் வடிவமைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி தயாரிக்கப்படுகிறது?

முதலில் மோதிரத்தின் வடிவம் 3D தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படுகிறது. பின்னர் அந்த வடிவமைப்பு கணினி வழியாக உற்பத்தி செய்யும் கட்டத்துக்கு அனுப்பப்படுகிறது. அதன்பிறகு குறிப்பிட்ட அளவுகளில் மோதிரங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் அளவு அரசு நிர்ணயித்துள்ள தரத்துக்கு ஏற்ப உள்ளதா என்பது சோதிக்கப்படுகிறது. இதற்காக அளவீட்டு கருவிகளில் மோதிரங்கள் பொருத்திப் பார்க்கப்படுகின்றன.

தொடர்ந்து மோதிரங்கள் குறிப்பிட்ட ரசாயனச் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதுடன், அதிக வெப்பத்தில் தயாரிப்பு மேற்கொள்ளப்படும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இறுதியாக தரம் உறுதி செய்யப்பட்ட மோதிரங்கள் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்படுகின்றன.

யார் தயாரிக்கிறார்கள்?

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கான மோதிரங்களைத் தயாரிக்கும் பணியில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக 11 முன்னணி நகை நிறுவனங்களிடம் அரசு தரப்பில் ஒப்பந்தப் பணிக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

https://x.com/CMOTamilnadu/status/2104201938879553794?s=20

அதில் செய்கூலி, ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து குறைந்த கட்டணத்தில் மோதிரங்களைத் தயாரிக்க ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் முன்வந்ததாகவும், அதேபோல் குறைந்த செலவில் தயாரிக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 1,28,499 தங்க மோதிரங்கள் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு எத்தனை குழந்தைகளுக்கு?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் ₹755 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதற்காக ₹560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 102 மையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். 

மதுரையில் முதலமைச்சர் விஜய்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதனுடன் மதுரையில் ₹10 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். 

குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள ஒரு கிராம் தங்க மோதிரம் எப்படி உருவாகிறது என்பதை முழுமையாகக் காட்டும் வகையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *