நீதிமன்றம் என்ன சொல்கிறது?
இதுதொடர்பாக U.P. Hindi Sahitya Sammelan v. State of U.P., (2014) 13 S.C.R. 675 (SC)வழக்கும் குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் இந்தி ஏற்கெனவே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த நிலையில், உருதுவை கூடுதல் அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது.
இந்த வழக்கில், மாநிலத்தில் ஏற்கெனவே ஒரு மொழி அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், அந்த மாநிலத்தில் பயன்பாட்டில் இருக்கும் மற்றொரு மொழியையும் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்ள மாநிலச் சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருப்பது விளக்கப்பட்டது.
இதனால், எட்டாவது அட்டவணை அங்கீகாரமும், ஒரு மாநிலத்தின் நிர்வாகப் பயன்பாட்டுக்கான அங்கீகாரமும் ஒன்றல்ல என்பது தெளிவாகிறது.
அப்படியானால்… துளுவுக்கு கிடைத்தது என்ன அங்கீகாரம்?
இங்குதான் துளுவின் தற்போதைய அங்கீகாரத்தைப் பார்க்க வேண்டும்.
2026 செப்டம்பர் 18-ம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவின்படி, தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் துளுவை கூடுதல் நிர்வாக மொழியாகப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, இது எட்டாவது அட்டவணையில் துளு சேர்க்கப்பட்டுவிட்டது என்பதல்ல. கர்நாடகா முழுவதற்குமான புதிய அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்தும் அல்ல. குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களில் நிர்வாகப் பயன்பாட்டுக்கான அங்கீகாரம் என்பதுதான் இதன் பொருள்.
மொழிக்கு அரசமைப்புச் சட்டம் தரும் மற்ற பாதுகாப்புகள்
மொழி தொடர்பான விஷயங்களில் 350 மற்றும் 350A சரத்துகளும் முக்கியமானவை.
350-வது சரத்து, ஒன்றியம் அல்லது மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மொழிகளில் குறைகளைத் தெரிவிக்கும் மனுக்களைச் சமர்ப்பிக்க வழிவகுக்கிறது.
350A சரத்து, மொழிச் சிறுபான்மை குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி நிலையில் தாய்மொழியில் கல்வி வழங்குவதற்கான போதுமான வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
அதனால், அதிகாரப்பூர்வ மொழி, எட்டாவது அட்டவணை அங்கீகாரம், தாய்மொழிக் கல்வி ஆகியவை வெவ்வேறு அரசமைப்புச் சட்ட நிலைகள்.
ஆனால், அரசின் அறிவிப்புடன் இந்தப் பயணம் முடிந்துவிடுகிறதா? நடைமுறையில் இந்த அங்கீகாரம் எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதும் முக்கியமான கேள்வியாகிறது.
துளுவுக்கு நிர்வாக மொழி அங்கீகாரம் கிடைத்துவிட்ட நிலையில், அடுத்த கேள்வி அதை நடைமுறையில் எப்படி கொண்டு வருவது என்பதுதான்.
“அங்கீகாரம் கிடைத்தது தொடக்கம் மட்டுமே. அரசு அலுவலகங்களில் துளு மொழிப் படிவங்கள், மொழிபெயர்ப்புகள், டிஜிட்டல் சேவைகள், அதிகாரப்பூர்வ சொற்களஞ்சியம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் துளு மொழிப் பயிற்சி வழங்கலாம். அதேபோல், கல்வி, ஆய்வு மற்றும் டிஜிட்டல் தளங்களில் துளுவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டால்தான், நிர்வாக அங்கீகாரம் அடுத்த தலைமுறையிடமும் துளு மொழியைத் தொடர்ந்து கொண்டு செல்ல உதவும்” என்கிறார் மங்களூருவைச் சேர்ந்த முகமது இர்ஃபான்.